கிராம வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி
மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரம் வேளாண்மைத் துறையின் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமையின் மூலம் 2024-25 நிதி ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பூனாம்பாளையம் கிராமத்தில் கிராம முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் அபிராமி வரவேற்புரை ஆற்றினார். மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) பரமசிவம் தலைமை வகித்து திட்ட விளக்க உரை ஆற்றினார். மேலும் காரீப் முன் பருவ பயிற்சியினை வழங்கினார்.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விதை இருப்பு மற்றும் விதைப்பு முறைகளை பற்றி எடுத்துக் கூறினார். தோட்டக்கலை அலுவலர் சுரேஷ் காய்கறி பயிரில் பயிர் பாதுகாப்பு பற்றியும் தோட்டக்கலை துறையில் செயல்படும் முக்கிய திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார். நுண்ணீர் பாசனம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் நான்கு வகையான பழக்கன்றுகள், காளான் வளர்ப்பு திட்டத்தின் மானியத்தை எடுத்துக் கூறினார்.
ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி எடுத்துக் கூறினார். வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுப்பொருட்கள் தார்பாய், பண்ணை உபகரணங்கள் தொகுப்பு பேட்டரி தெளிப்பான் மானியங்கள் குறித்து உரை ஆற்றினார். வாய்ஸ் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த இலக்கியா அங்கக வேளாண்மை குறித்து எடுத்து கூறினார். இறுதியில் உதவி தொழில் நுட்ப மேலாளர் சிந்தியா நன்றி உரை கூறினார்.