மீன் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தின் முன் கிராம மக்கள் தர்ணா போராட்டம்
நாகை மாவட்டம்திருமருகல் அருகே மீன் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தின் முகப்பில் அமர்ந்து கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் கிராமத்தில் மீன் எண்ணெய் தயார் செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.கசார் என்றழைக்கப்படும் மீன் கழிவுகளை இராட்சத இயந்திரங்கள் கொண்டு அரைத்து மீன் எண்ணெய் தயார் செய்தல், அதிலிருந்து கிடைக்கும் மீன் கழிவுகளை இறால் தீவணங்களுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
கேரளாவை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான நிறுவனத்தில் மீன்கள் அறைக்கப்படும் பொழுது பாய்லரில் இருந்து வெளியேறும் நச்சு புகைகளால் துருநாற்றம், வாந்தி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாவதாக உத்தமசோழபுரம்,ஒக்கூர், வாழஒக்கூர்,வெங்கிடாங்கால் உள்ளிட்ட கிராம மக்கள் அவதி அடைவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த நிறுவனத்தை விரிவாக்கம் செய்து அருகாமையில் மற்றொரு மீன் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் வர உள்ளதாக தகவல் வெளியானது.இதனால் ஆத்திரடைந்த அப்பகுதியை சேர்ந்த 100 - க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நிறுவனத்தின் முன்பு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நிறுவனத்தின் முகப்பு கண்ணாடிகளை உடைத்து, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நிறுவனத்தின் முகப்பில் அமர்ந்து துர்நாற்றம் காரணமாக முககவசம் அணிந்து இளைஞர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மீன் எண்ணெய் உற்பத்தியை நிறுத்த வேண்டும், துருநாற்றம் வீசும் நிறுவனத்தை மூட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். நச்சு புகையின் நாற்றம் காரணமாக வாந்தி உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு உள்ளாவதால், இரவு நேரங்களில் சாப்பிட முடியாத நிலை இருப்பதாகவும், கடமைக்காக வாசனை திரவியங்களை அடித்து நாடகமாடுவதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.