குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் !

கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வருவாய்த்துறையினரிடம் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் முயற்சியில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-03-13 11:47 GMT
விருதுநகர் அருகே கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வருவாய்த்துறையினரிடம் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் முயற்சியில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஓ. சங்கரலிங்கபுரம் கிராமத்தில் 1000-கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 700க்கும் மேற்பட்ட பெரும்பான்மை சமூகத்தை (தேவாங்கர்) சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இச்சமூகத்திற்கு சொந்தமான விநாயகர் கோயிலை ஒட்டியுள்ள 5 சென்ட் நிலத்தில் 5 கடைகள் சுமார் 45 வருடங்களாக இயங்கிவருகிறது. இக்கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊர் தலைவர் செல்வராஜ் மகன் எஸ்.சரவணன் என்பவர் கோயில் அருகே உள்ள 5 கடைகள் அரசு புறம்போக்கு இடம் என்றும் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பிப்ரவரி 16-ம் தேதி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் அரசு புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்ப அடையாள அட்டை ஆதார் அட்டை ஆகியவற்றை கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராம நிர்வாக அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய இக்கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊர் தலைவர் சி. சரவணன் கூறியதாவது, முன்னாள் ஊர் தலைவர் செல்வராஜ் மகன் சரவணன் நீதிமன்றத்தில் உண்மைக்கு புறம்பான தவறான தகவலை சமர்ப்பித்து எங்கள் சமுதாயத்திற்கு சொந்தமான இடத்தை புறம்போக்கு இடம் எனக்கூறி மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டுமென தீர்ப்பு வந்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரேஷன் கார்டு ஆதார் அட்டை ஆகியவற்றை வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளோம். நீதிமன்றம் எங்களது தரப்பு விளக்கத்தைக் கேட்கவில்லை. எனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதை நிறுத்த வேண்டுமென தெரிவித்தார்.
Tags:    

Similar News