விழுப்புரம் : தொழிலாளியை தாக்கியவருக்கு 3 ஆண்டு சிறை
Update: 2023-12-01 16:32 GMT
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா தேற்குணம் இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை ( 50), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 13.11.2020 அன்று தனது குலதெய்வமான கன்னியம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றிவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். முறுக்கம் சாலை வழியாக வந்துகொண்டிருந்த போது அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் வீட்டிற்கு எதிரே அவரது மகன்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்துக்கொண்டி ருந்தனர். இதைப்பார்த்த ஏழுமலை, அங்குள்ள சாலையோரமாக நின்றுகொண்டிருந்தார், அப்போது அங்கு வந்த தேற்குணம் மேட்டுத்தெருவை சேர்ந்த மருதமலை (43) என்பவர், ஏழுமலையை பார்த்து இன்றைக்குத்தான் உனக்கு தீபாவளியா, இங்கு என்ன உனக்கு வேலை என்று சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தையால் திட்டினார். இதை தட்டிக் கேட்ட ஏழுமலையை மருதமலை இரும்புக்கம்பியால் தாக்கினார். இதில் காயமடைந்த ஏழுமலை, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார், இச்சம்பவம் குறித்து ஏழுமலை, கிளியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் மருதமலை மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட மருதமலைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை யும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கோதண்டபாணி ஆஜரானார்.