தேர்தல் நடத்தை விதிகள் அமல் - விளம்பர பதாகைகள் அகற்றம்

தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. மேலும் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Update: 2024-03-18 01:26 GMT

பேனர்கள் அகற்றும் பணி

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதியை நேற்று முன்தினம்  மாலை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அந்த நிமிடத்தில் இருந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து மாவட்டத்தின் பல இடங் களில் ஏற்கனவே அரசியல் கட்சியினரால் வைக்கப்பட்டுள்ள விளம் பர பதாகைகளை அகற்றும்படி சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி  அரசியல் கட்சியினர் தாங்கள் வைத்த விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு சில இடங்களில் அரசியல் கட்சியினர், விளம்பர பதாகைகளை அகற்றாதபட்சத்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் நகரில் புதிய பஸ் நிலையம், நகராட்சி திடல், நான்கு முனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், கிழக்கு புதுச்சேரி சாலை உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில் நகராட்சி ஆணையர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் மதன்குமார் மற்றும் நகராட்சி ஊழி யர்கள் ஈடுபட்டனர்.

மேலும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோல் மாவட்டத்தின் பல இடங்களில் இருந்த அரசியல் கட்சியினரின் விளம்பர பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.இதுதவிர கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இருந்த அரசியல் சார்ந்த படங்கள், காலண்டர்கள், நலத்திட்ட ஸ்டிக்கர்கள், பிரதமர், முதல்-அமைச்சர், அமைச்சர்களின் புகைப்படங்களும் அகற்றப்பட்டன.

Tags:    

Similar News