தேர்தல் நடத்தை விதிமீறல்: சுயேச்சை வேட்பாளர் மீது வழக்கு பதிவு
மார்த்தாண்டம் அருகே தேர்தல் விதிமுறைகள் மீறி துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்த சுயேச்சை வேட்பாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சி வேட்பாளர்கள் உள்பட 10 பேர் போட்டியிடுகிறார்கள்.
இவர்களில் தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி சார்பில் குழித்துறை தெற்றிவிளையை சேர்ந்த பழவார் தங்கப்பன் என்பவரும் போட்டியிடுகிறார்.இந்த நிலையில் பழவார் தங்கப்பன் அரசு உத்தரவை மீறி அச்சகத்தின் பெயரிடாமல் மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சியில் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுபற்றி தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த நாகர்கோவில் மாவட்ட வேலை வாய்ப்பு மைய இளநிலை அலுவலர் சபரிநாதன் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பழவார் தங்கப்பன் மீது மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெனடிக்ட் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.