விராலிமலை: பதுக்கி வைக்கப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விராலிமலை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து பதுக்கியவரை கைது செய்தனர்.
Update: 2024-05-10 04:19 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நேற்று மதியம் விராலிமலை அருகே லஞ்சமேடு பகுதியில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 21 சாக்கு மூட்டைகளில் சுமார் ஆயிரத்து 50கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம்(65) என்பவர் விராலிமலை, கொடும்பாளூர், லஞ்சமேடு ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி மணப்பாறையில் கூடுதல் விலைக்கு விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.