விருதுநகர் புத்தக திருவிழா - சொற்பொழிவாற்றிய விருந்தினர்கள்

Update: 2023-11-26 05:17 GMT
 சொற்பொழிவை கேட்க வந்த பொதுமக்கள் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது விருதுநகர் புத்தக திருவிழா ஒன்பதாம் நாள் கலை இலக்கிய அரங்கு நிகழ்ச்சியில், கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் மரு.இரா.ஆனந்தகுமார், “தெருவிளையாடல் கால்பந்தின் ஆனந்தம் “ என்ற தலைப்பிலும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற பொதுச் செயலாளர் மரு.அறம் “மேதகு ஆளுமைகள்“ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். பின்னர், கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் மற்றும் குழுவினரின் இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்கப் பெரிதும் காரணம் படைப்பாளிகளா? படிப்பாளிகளா? என்ற தலைப்பில் தமிழ் இனிமைப் பட்டிமன்றம் நடைபெற்றது.

கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் மரு.இரா.ஆனந்தகுமார் “தெருவிளையாடல் கால்பந்தின் ஆனந்தம் “ என்ற தலைப்பில் பேசுகையில்: எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் வெற்றி தோல்வி என்பது ஒரு நூலிழை வித்தியாசத்தில் சந்திக்கும் வாய்ப்பு, இதயத்தின் துடிப்பினை அதிகரிக்க செய்யக் கூடியது. அத்தகைய தருணங்கள் வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்த்துகின்ற தருணங்கள். விளையாட்டு விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடிய காரியம் அல்ல என்பதை எடுத்துக்காட்டத்தான்; திருவிளையாடல் என்பதனை முன்னோர்கள் மிக உயர்ந்த இடத்தில் பெயரிட்டு அழைத்து இருக்கின்றார்கள். வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அது திருவினையாக மாறும் என்ற நம்பிக்கையினை நம்முள் விதைப்பது பல்வேறு விதமான விளையாட்டுகள். பழந்தமிழர்கள் தொடங்கி, கிரேக்க ரோமானிய சாம்ராஜ்யத்தில் இருந்து இந்த காலம் வரை விளையாட்டின் அருமை எல்லா இடங்களிலும் பிரதிபலித்து வருகின்றது. அத்தகைய சூழ்நிலையிலே இந்திய ஆட்சி பணி அலுவலர்களுக்கு இடையிலான ஒரு போட்டியினை நடத்த வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்னால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, சென்ற ஆண்டு அது முழுமையாக நடைபெற்று அதில் சாம்பியன்ஷிப் என்ற வெற்றி கனியைப் பறித்த நிகழ்வு ஒரு ஒப்பற்ற மகிழ்ச்சியை தந்தது. அதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை காரணத்தோடு விளையாட்டை நோக்கிய நமது பார்வை மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்கின்ற தீராத ஆர்வத்துடன் இந்த புத்தகத்தை எழுதி முடித்ததில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.

Foot ball-- இல் முதலெழுத்து F என்பதை Fitness என்று வைத்துக் கொள்ளலாம். சுவாமி விவேகானந்தர் அவர்கள் கால்பந்து குறித்து சொல்லும் போது, கால்பந்து உங்களை சொர்க்கத்திற்கு அருகில் அழைத்துச் செல்லும் என்று. சொர்க்கத்திற்கு அருகில் எடுத்துச் செல்லும் இந்த கால்பந்து வலுவான உடலில் தான் இந்த வலுவான மனங்கள் இருக்க முடியும் எனக் கூறியிருக்கின்றார். இரண்டாவது O-Optimism ஒளிமயமான எதிர்காலம் கண்களில் தெரிகின்றது என்ற நம்பிக்கையை தருகிறது. மூன்றாம் எழுத்து Openness. ஒரு செயலை செய்யும் பொழுது வெற்றி, தோல்வி என்பது ஒன்றுதான் என்ற எண்ணத்தோடு இதுவரை தோல்வியே அடையாத அணியை போல ஆட வேண்டிய எண்ணத்தை உருவாக்குவது. நான்காம் எழுத்து T-Talent என்பதனை வளர்த்துக் கொள்ள இயற்கை வாய்ப்பினை அளித்திருக்கின்றது. இருந்த போதிலும் அதிர்ஷ்டம் என்று சொல்லக்கூடிய எதிர்பாராத தற்செயலாக நடக்கக்கூடிய செயல்களை மிகச் சரியாக பயன்படுத்துவது மிக அற்புதமான திறமைகளில் ஒன்றாகும். ஐந்தாம் எழுத்து B-Balance மிக நெருக்கமான பதட்டம் அடைகின்ற தருணங்களில் கூட தன்னுடைய மனதை கட்டுப்படுத்தி சமநிலையோடு சரியான முடிவு எடுப்பதற்கு விளையாட்டு களம் நம்மை தயார் செய்கிறது. ஆறாம் எழுத்து A-Attitude 11 நபர்களில் பலர் வெற்றியாளர்களாக இருக்கலாம்.

ஆனால் 11 வெற்றியாளர்கள் சேர்ந்து அவர்களுடைய நல்ல பண்புகளை மட்டுமே சேர்த்து குறைகளை களைந்து, இணைந்து விளையாடும் பொழுது பன்மடங்கு ஆற்றலை பெருக்கக் கூடிய திறமை. திறமை இருந்ததால்தான் இந்த போட்டியில் வெற்றி பெற்ற இறுதி ஆட்டத்திலே முக்கியமான மூன்று ஆட்டக்காரர்கள் வராத சூழ்நிலையிலும் கூட வெற்றிக்கனியை பறிக்க முடிந்தது. அதிக உயரத்தில் இருந்து அணிகள் எவ்வாறு வீழ்ந்தன. எவ்வாறு முயற்சி செய்த அணி முன்னேறி சாதித்துக் காட்டின. ஒவ்வொரு ஆட்டத்திலும் பந்தையே தொடாத ஆட்டக்காரர்கள் எல்லாம் வெற்றிக் கனியை பறிப்பதற்கு உதவினார்கள். இதுபோல் எவ்வாறு நம்மால் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களிலும் நல்ல நேர்மறை சிந்தனை உடன் செயல்பட்டால் வெற்றி பெற முடியும் என்பதற்கான உதாரணங்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து மிக அழகாக பல்வேறு நல்ல உள்ளங்களின் உதவியோடு இந்த தெருவிளையாடல் கால்பந்தின் ஆனந்தம் என்ற புத்தகத்தை உருவாக்க முடிந்தது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற பொதுச் செயலாளர் மரு.அறம் “மேதகு ஆளுமைகள்“ என்ற தலைப்பில் பேசுகையில்: நூற்றாண்டு கண்ட ஆளுமைகளில் நான்கு ஆளுமைகள் எடுத்துக் கொண்டால், கடந்தாண்டில் மூன்று ஆளுமைகளுக்கு நூற்றாண்டுகள் முடிவடைந்துவிட்டது.

பழைய நெல்லை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் இலக்கிய போராளியாக திகழ்ந்த தொ.மு.சி ரகுநாதன் 1923 இல் பிறந்து 2001 வரை வாழ்ந்து மறைந்தவர். கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் என்ற இடத்தில் பிறந்த கி.ராஜநாராயணன் என்பவரும் 1922 இல் பிறந்து 2021 வரை வாழ்ந்து மறைந்தவர். கு.அழகிரிசாமி என்பவர் 47 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து தமிழ் இலக்கியத்திற்கு மிகப்பெரிய சேவை செய்து திசைகாட்டியாக இருக்கக்கூடியவர் கடலூரில் பிறந்து புதுவையில் வளர்ந்து சென்னையில் தன்னுடைய வாழ்வை கழித்த பொதுவுடமை கவிஞர் தமிழ் ஒளி.

இந்த நால்வரையும் தமிழக அரசு மிகச் சிறப்பாக நினைவு கூர்ந்துள்ளது. எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு நினைவு மண்டபம் கட்டி உள்ளது. எழுத்தாளர் கு.அழகிரிசாமி படைப்புகளை வெளி உலகத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழக அரசின் சார்பாக கவிஞர் தமிழ்ஒளிக்கு நிதி ஒதுக்கி அவரின் நினைவாக தஞ்சை பல்கலைக்கழகத்தில் சிலை நிறுவியுள்ளது. எழுத்தாளர் தொ.மு.சி. ரகுநாதன் அவர்களுக்கு பாரதி குறித்த நினைவு நூற்றாண்டில் விருது வழங்கி கௌரவித்துள்ளது. எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் 1961இல் வத்திராயிருப்பு நூலகத்தில் புதுமைப்பித்தன் குறித்த ஒரு தேர்வு நடத்தி இருக்கிறார். புதுமைப்பித்தன் குறித்த ஒரு கேள்விகள், சிறுவினா புதுமைப்பித்தன், பெருமை வினா, ஒரு வரி வினா புதுமைப்பித்தன் இப்படி எல்லாம் தமிழ் பல்கலைக்கழகத்தில் கூட கற்பனை செய்து கொள்ள முடியாத அந்த சூழ்நிலைகள் கூட

எழுத்தாளர் தொ.மு.சி அப்படி செய்திருக்கிறார். புத்தகத்தின் மீது அவருக்கு மிகப்பெரிய காதல். மிகப்பெரிய புரட்சி செய்திருக்கிறார் தொ.மு.சி. சிலப்பதிகாரம் நாம் படித்திருப்போம். இளங்கோவடிகள் யார் என்று நமக்கு தெரியும். சேரன் செங்குட்டுவனின் தம்பி. ஒரு அடிகளார் துறவி என்று தெரியும். ஆனால் தொ.மு.சி ரகுநாதன் 30 ஆண்டு காலமாக உழைத்து 185 நூல்களை துணையாக வைத்துக் கொண்டு, இளங்கோவடிகள் ஒரு வணிகர் நகை வியாபாரி என எழுதி இருக்கிறார்.

சோழ மன்னன் இருக்கிறான் என்றால் சோழ மன்னன் கோயில் இருக்கிறது. கோவிலை அடுத்து சோழ மன்னனின் அரண்மனை. அரண்மனைக்கு அடுத்து யார் வீடு இருக்கும். வணிகத்தில் ஈடுபடக்கூடியவர்களுடைய வீடு தான் இருந்தது. மாதவி வந்து ஆடுகிறார் மாதவியை யார் விரும்பினாலும் கூட்டிச் செல்லலாம். சோழன் விரும்பினால் கூட்டுச் செல்லலாம் அல்லது வணிகன்; விரும்பினால் கூட்டிச் செல்லலாம். யார் கூட்டி சென்றார்கள் என்றால் கோவலன் தான் கூட்டி சென்றான். ஏனென்றால் மாதவியோடு ஒரு நாள் இருப்பதற்கு 1058 பொற்காசுகள் தர வேண்டும். சோழ மன்னனுக்கும் வணிகர்களுக்கும் இடையே இருந்த போட்டிதான் சிலப்பதிகாரம். நாட்டுப்புறக் கதைகள் நிறைய கதைகள் உண்டு. நகரத்தார்கள் என்று சொல்வார்கள். ஏன் நகரத்தார்கள் என்று சொன்னார்கள் என்றால், அவர்களுடைய வீடு ஒவ்வொன்றும் நகரம் போல இருக்கும். அதனால் நகரத்தார்கள் என்றார்கள். இளங்கோ என்றால் கோ என்பது மன்னன், மன்னனின் தம்பி என்று நாம் புரிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் சிலப்பதிகாரத்தில் மன்னர் பின்னர் என்று சொல்வார்கள். மன்னனுக்கு பின்பாக இருப்பவர்கள். மன்னனுக்கு முடி சூடக் கூடியவன். இதெல்லாம் வைத்து பார்க்கும் போது வணிகர்களுக்கும், அரசர்களுக்கும் நடந்த ஒரு வர்க்க போராட்டம் தான் இந்த சிலப்பதிகாரம் எனக் கொண்டு வருகிறார். இதை யாரும் மறுக்க முடியவில்லை.

அந்த மாதிரியான ஆய்வுகளை மிக அற்புதமாக செய்துள்ளார். மிகப்பெரிய இலக்கியத்தின் திசைக்காட்டியாக கு.அழகிரிசாமி அவர்களை சொல்லலாம். திரிபுரம்; என்று ஒரு கதை. விருதுநகரில் இருந்து சாத்தூருக்கு வெங்கட்டம்மாவும், நரசிம்மாவும் நடந்து செல்கிறார்கள். பஞ்சகாலத்தில் சாத்தூர் பஸ் நிலையம் முன்பு ஒரு வெள்ளரிக்காய் கீழே கிடக்கிறது. பசி கொடுமை அதை எடுத்து திங்கலாமா என்று இருவருக்கும் மனம் வருகிறது. ஆனால் தன்மானம் தடுக்கிறது. அப்படியே நடந்து செல்கிறார்கள். அங்கே வைபாற்றில் தண்ணீர் எடுத்துக் குடிக்கிறார்கள். அந்த மணலில் அயர்ந்து படுத்து தூங்குகிறார்கள். இதற்கிடையில் பசி கொடுமை தாங்காமல் பணத்திற்காக தன் உடலை விற்கிறார்கள். பணம் எளிதாக கிடைக்கிறது. சாத்தூர் ரயில் நிலையத்தில் வெங்கட்டம்மா பணத்தை இந்த கையுக்கும் அந்த கைக்கும் மாற்றி மாற்றி போட்டு, பணம் எவ்வளவு எளிதாக கிடைக்கிறது என்று சிரிக்கிறார்.

இதுதான் கதை. இவர் கதைக்கு வைத்த பெயர் திரிபுரம். திரிபுரம் என்றால் மூன்று அரக்கர்கள். தங்களை அழிக்க முடியாதபடி வரம் வாங்கி இருக்கிறார்கள் சிவபெருமானிடம். சிவன் அவர்களை சிரித்து அளித்ததாக புராணக்கதையை இங்கே ஒப்பிட்டுகிறார். தன்னுடைய உடலை வறுமையின் காரணமாக விற்று எளிதாக பணம் கிடைத்த அந்த வெங்கட்டம்மாள் சிரிக்கிறாள். சமூகத்தின் ஒழுக்க கேட்டை பார்த்து, பணக்காரர்களை பார்த்து, ஏழைகளை பார்த்து, இந்த சமூகத்தை பார்த்து என்று எழுதுகிறார். அவருடைய கட்டுரைகளும் நிறைய இருக்கின்றன. படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தாமல் எழுத்தாளர்களை காப்பாற்ற முடியாது என்று அன்றைக்கே சொல்லி இருக்கிறார் கவிஞர் தமிழ் ஒளி. கு.அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன் ஆகியவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு கஞ்சிக்கு வழி இல்லாமல் இருந்தார்கள்.

இது போன்ற புத்தகத் திருவிழாவை அன்றைக்கு நடத்தி இருந்தால் எத்தனையோ எழுத்தாளர்கள் பிழைத்திருப்பார்கள். இந்த எழுத்தாளர்களின் படைப்புகளை எல்லாம் நாம் மேல் வாசிப்பு செய்ய வேண்டும். பொதுவாக இந்த தமிழ்ஒளி பொது உடைமை கவிஞர். கடலூரில் பிறந்து, புதுவையில் வளர்ந்து, பாரதிதாசனின் மாணவனாக திராவிட சிந்தனைகளோடு முரசொலியை வாங்கி விற்றவர். பின்பு பொது உடமைக்கு வருகிறார். தொழிலாளர்களை பற்றிய மே தினத்தை முதன் முதலில் தமிழில் வரவேற்றார் கவிஞர் தமிழ்ஒளி. சாக்கடை சமுதாயம் என்ற ஒரு கதை எழுதி இருக்கிறார். இன்று பாதாள சாக்கடையில் தொழிலாளர்கள் சாகிறார்கள். அதை அன்றைக்கே தன்னுடைய காவியத்தில் சிறுகதையில் பதிவு செய்தவர் தமிழ்ஒளி. கி.ரா- வின் காப்பியம் ஒன்றை மட்டும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பெரும் மழை பெய்கிறது. அதில் அடித்துச் செல்லப்பட்ட நீரில் இரு உயிர்கள் தப்பிக்கின்றன. ஒரு சிறு பெண்ணும் வயதான முதியவரும் அந்த தண்ணீரில் அடுத்து செல்லும்போது ஒரு ஊரில் புதுப்பட்டியில் இவர்கள் இருவரும் கரையேறுகிறார்கள். அங்குள்ள மனிதர்கள் எல்லாம் இவர்களை காப்பாற்றுகிறார்கள். அப்போது ஒரு சேரி சிறுவன் இது எங்கள் சொந்தக்காரர் என்று அவர்களை சொல்கிறான். மற்ற ஜாதியினர்கள் அனைவரும் விட்டு ஓடுகின்றனர். அப்போது சேரியில் வளர்கிறார். அங்கே உள்ள ஜமீன்தார் அவளை அடைய நினைக்கும் போது, அந்த சேரி சிறுவன் ஜமீந்தாரை கொலை செய்கிறான். பின்னர், அந்த கிழவரும் வீராயும் கஷ்டப்படும்போது, கண்காணி மூலம் ஆப்பிரிக்க தேயிலை தோட்டத்திற்கு செல்கிறார்கள். அங்கே வறுமையால் முதியவர் இறக்கிறார். வீராயி தற்கொலை செய்ய முயற்சி செய்யும் போது ஒரு இடைநிலை ஜாதியை சேர்ந்தவர் ஒருவன் இவளை கல்யாணம் செய்வதாக உறுதிமொழி கொடுக்கிறான். அவர்கள் இருவரும் இங்கே வருகிறார்கள். இங்கு வந்தால் அந்த இடைநிலை ஜாதியை சேர்ந்தவர்கள் இவர்கள் இருவரையும் மணப்பந்தலிலேயே கொளுத்துகிறார்கள். இது 1958 இல் எழுதியுள்ளார். இந்த பிரச்சனை இன்றும் முடிந்ததா, முடியவில்லை. இப்போது கவிஞர் தமிழ்ஒளி அன்றைய பிரச்சனையாக இருந்தாலும் சரி, சாதிய பிரச்சினையாக இருந்தாலும் சரி அப்பட்டமாக எழுதியவர்.

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா. கி.ரா-வின் நாட்டுப்புறக் கதைகள் நிறைய இருக்கின்றது. நாட்டுப்புற கலைகள் 100 தெரிந்து விட்டால், இந்த உலகத்தை தெரிந்து கொள்ளலாம் என்கிறார். நாட்டுப்புற கதைகளில் தான் அதிகாரத்தை கேள்வி கேட்கக்கூடிய துணிவு இருக்கும். ஒரு அரசபையில் எதிர்க்க முடியாது. நாட்டுப்புற கதையில் மிக எளிமையாக எதிர்த்து அடித்துச் சொல்ல முடிகிறது. இதைத்தான் கி.ரா ரசித்தார். இந்த அளவில் கி.ரா, கு.அழகர்சாமி, தமிழ்ஒளி, தொ.மு.சி.ரகுநாதன் இந்த நால்வரும் இலக்கியத்திற்காகவே தங்களுடைய வாழ்வை அர்ப்பணித்து, இலக்கியத்தினாலே துன்பப்பட்டு, மறைந்தவர்கள். இவர்களின் எழுத்துக்களை நாம் மீண்டும் மேல் வாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பல்வேறு சம்பவங்கள், கதைகளையும், குறிப்புகளை உதாரணமாக எடுத்துரைத்தார்.

Tags:    

Similar News