விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வாகனம் நிறுத்தும் இடம் அமைப்பது குறித்து ஆட்சியர் ஆய்வு !
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எளையம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று (20.05.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா வாக்கு எண்ணிக்கை நாள் அன்று வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அருகில் வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைப்பது குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைப் பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று அமைதியான முறையில் நடைபெற்றது. 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 92.இராசிபுரம், 93.சேந்தமங்கலம், 94.நாமக்கல், 95.பரமத்தி வேலூர், 96.திருச்செங்கோடு மற்றும் 87.சங்ககிரி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் இயந்திரங்கள் (VVPAT) ஆகியவை 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்புடன் சட்டமன்றத் தொகுதிவாரியாக வைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, இன்று (20.05.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா நடைபெற்ற மக்களவைப் பொதுத்தேர்தலில் வாக்கு பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.