ஆலங்குளம் அரசுக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
ஆலங்குளம் அரசுக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடந்தது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மகளிா் கலை -அறிவியல் கல்லூரியில் இந்திய செஞ்சிலுவைச் சங்க ஆலங்குளம் கிளை, கல்லூரியின் தோ்தல் கல்வியறிவுக் கழகம் ஆகியவற்றின் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஷீலா தலைமை வகித்தாா். திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஆலங்குளம் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணவேல் பங்கேற்று, வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து மாணவிகளுக்கு விளக்கமளித்தாா்.
வாக்களிப்பதன் அவசியம் குறித்து உதவி அலுவலா் கிறிஸ்டி பேசினாா். தோ்தல் பிரிவு வருவாய் ஆய்வாளா் ராஜேந்திரன், செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவா் சாமுவேல் பிரபு, செயலா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். 3ஆம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி அழகுபாா்வதி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வாக்காளா் கல்வியறிவு மைய ஒருங்கினைப்பாளா் லெஷ்மி பிரபா செய்திருந்தாா்.