சேலத்தில் மின்னணு எந்திரங்கள் பழுது ஓட்டுப்பதிவு தாமதமாக தொடங்கியது
சேலத்தில் பல இடங்களில் மின்னணு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு தாமதமாக தொடங்கியது
சேலம் வடக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அய்யந்திருமாளிகை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையத்தில் உள்ள வாக்குச்சாவடி எண்-13-ல் ஓட்டுப்பதிவுக்கு முன்னதாக நேற்று காலை 6 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. ஆனால் ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் மின்னணு எந்திரத்தில் அதை அழிக்கமுடியவில்லை. வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீரென பழுதானதால் அங்கிருந்த அலுவலர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர்.
அதற்குள் ஓட்டுப்பதிவு தொடங்கும் நேரமான காலை 7 மணி ஆகிவிட்டது. ஓட்டுப்போடுவதற்காக காலையிலேயே ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதையடுத்து மண்டல அலுவலர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு எந்திரத்தில் ஏற்பட்ட குளறுபடியை சரிசெய்தனர். அதன்பிறகு சுமார் 45 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
இதேபோல், சேலம் அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த 4-வது வாக்குச்சாவடி மையத்திலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் ஓட்டுப்பதிவு தொடங்கமுடியவில்லை. இதனால் வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததால் சிரமத்திற்கு ஆளாகினர். அதன்பிறகு பழுதான வாக்குப்பதிவு எந்திரங்களை அதிகாரிகள் சரி செய்ததை தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதையடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
கருப்பூர் பேரூராட்சி 15-வது வார்டில் வாக்குப்பதிவு எந்திரம் சுமார் அரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல், மாவட்டத்தின் ஒருசில வாக்குப்பதிவு மையங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் திடீரென பழுதடைந்தன. அதன்பிறகு அவற்றை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் சரி செய்ததை தொடர்ந்து சிறிது நேரத்திற்கு பிறகு ஓட்டுப்பதிவு தொடங்கியது.