கத்தாங்கன்னி நொய்யல் ஆற்றில் நீர்மட்டம் 2 அடி உயர்வு
கோடைகால மழை பொழிவால் - கத்தாங்கன்னி நொய்யல் ஆற்றில் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் - ஊத்துக்குளி எல்லையில் நொய்யல் ஆறு செல்கிறது. அப்பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்கள், இயற்கை தாவரங்கள், உள்நாட்டு வெளிநாட்டு பறவைகள் என இயற்கைக்கும், அதனை சார்ந்த உயிரினங்களுக்கும் நீர் ஆதாரமாக இந்த ஆறு இருந்து வருகிறது. பெரும்பாலான நேரங்களில் சாயக்கழிவு நீர் ஆற்று நீரில் கலந்து ஓடுகிறது.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கோடைகால பருவநிலை மாற்றத்தால் பெய்யும் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வழக்கத்திற்கு மாறாக தற்போது சுமார் 2 அடி உயரம் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்பகுதியில் போதிய மழை பொழிவு இல்லாத பட்சத்திலும் தற்போது பொழியும் கோடைக்கால மழையினால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து பிரிந்து வரும் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து சற்று உயரந்துள்ளதால் ஊத்துக்குளி, கத்தாங்கன்னி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும், கிணறு, குளம் மற்றும் குட்டைகளில் நீரூற்றும் உயர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் எதிர்பார்த்த அளவு விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்பிற்கும் இந்த மழை நீர் அமைந்துள்ளது எனவும், அடுத்து மழைகாலத்தில் போதிய பெரிய அளவு மழை பெய்யும் பட்சத்தில் நிலத்தடி நீர் மட்டம் நன்கு உயரும் எனவும், கத்தாங்கன்னி அணை நீர்மட்டமும் உயரும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.