முக்கொம்பு அணையிலிருந்து 2,115 கன அடி தண்ணீர் திறப்பு.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலையில் உள்ள முக்கொம்பு மேலணையிலிருந்து, 2,115 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 2,100 கன அடி தண்ணீர், கரூர் மாவட்டம் மாயனுார் அணை வழியாக, திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அதே சமயம், ஈரோடு, கரூர், சேலம் மாவட்டங்களில் பெய்த மழையால், காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த தண்ணீரும் மேலணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே, முக்கொம்பு மேலணையில் இருந்து, 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு முதல், தண்ணீர் திறப்பு, 2,115 கன அடியாக உயர்த்தப்பட்டது. அதனால், காவிரி கரையோர மக்கள், ஆற்றில் இறங்க வேண்டாம், என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், கல்லணைக்கு வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான், மேலணையில் உள்ள 41 மதகுகளின் ஷட்டர்களும் பழுது பார்த்து, சீரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.