' ஆவடியில் குடிநீர் வினியோகம் பாதிப்பு

ஆவடியில் 6 மாதத்திற்கு முன் 3 மோட்டார்கள் பழுதடைந்தால் , குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-21 00:45 GMT

ஆவடியில் 6 மாதத்திற்கு முன் 3 மோட்டார்கள் பழுதடைந்தால் , குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு, கோவில் பதாகை, ராஜிவ் காந்தி நகரில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், ராஜிவ் காந்தி நகர் 1வது தெரு, 3வது தெரு, 4வது மற்றும் 6வது தெருவில், நான்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. அங்கிருந்து மின் மோட்டார் வாயிலாக, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், 1, 4, 6வது தெருவில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டு இருந்த மூன்று மின் மோட்டார்கள், ஒரே நேரத்தில் பழுதாகின. இதனால், பகுதிவாசிகள் 1 கி.மீ., துாரம் சென்று, தனியார் கிணறு ஒன்றில் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். வாரத்திற்கு ஒரு முறை மட்டும், மாநகராட்சி லாரிகள் வாயிலாக தண்ணீர் வினியோகிக்கப்படுகின்றன. மற்ற நாட்களில், ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இதனால், பகுதிவாசிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து கவுன்சிலர் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், மின் மோட்டார் பழுதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மின் மோட்டார் பிரச்னையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News