பதனீர் கொடுத்து வரவேற்பு - முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் ருசிகரம்
கன்னிராஜபுரம் அரசுப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சங்கம நிகழ்ச்சியில் இயற்கை பானமான பதநீர் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 1995ம் ஆண்டு முதல் 1999ம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவ மாணவியர்களின் வெள்ளி விழா சங்கம நிகழ்ச்சி நரிப்பையூர் தேவரத்தினம் இருதயம்மாள் திருமண மஹாலில் நடைபெற்றது. முன்னாள் ஆசிரியர்களான அன்னம்மாள், மரகதம், சரஸ்வதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்த இந்த விழாவில் ஆசிரியர்கள் சின்னத்துரை, ஸ்டாலின், ராஜபாண்டியன், ராயன், கலைமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவுக்கு வருகைதந்த அனைவருக்கும் பனை ஓலை பட்டைகளில் இயற்கை பானமான பதனீர் வழங்கப்பட்டது. இதுகுறித்து முன்னாள் மாணவரான தெற்கு நரிப்பையூர் ரியாஸ்கான் கூறும்போது "இயற்கையை நேசிக்கும் விதமாக வரவேற்பு பானமாக அனைவருக்கும் ஆகாய கங்கை என போற்றப்படும் பதனீரை கொடுத்து வரவேற்றோம். இன்றைய சூழலில் கலப்படம் நிறைந்த குளிர்பானங்கள் கொடுத்து உறவுகளை வரவேற்பதை தவிர்த்து அந்தந்த காலகட்டங்களில் கிடைக்கும் இயற்கை பானங்களை கொடுத்து வரவேற்க வேண்டும் என்ற நோக்கத்தில் பதனீர் கொடுத்து வரவேற்றோம்" என்றார்.
இந்த வெள்ளி விழா மாணவர்கள் சங்கம நிகழ்ச்சியில் பங்கேற்க வெளிநாடுகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் மாணவ, மாணவியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் வந்து கலந்துகொண்டனர். விழாவின் இடையே மலேசியாவில் சர்வதேச அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஆர்.சி.வேப்பமரத்துப்பனை கிராமத்தை சேர்ந்த மாணவன் ஜெகதீஷ் பிரதீப் மற்றும் வருகைதந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்களான செண்பகப்பாண்டியன், ராம்குமார், ரியாஸ்கான், முகமது ஆதில், தேன்மொழி, பேச்சியம்மாள், சரவணன், சந்தனமரியான், சுலைமான், நளினிபிரேமா, லிங்கம்மாள் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். விழா நிறைவில் சுலைமான் நன்றி கூறினார். ஆசிரியர்களுடன் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.