நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான பா.ஜ.கவில் என்னென்ன திட்டங்கள் உள்ளன?

நீலகிரி (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க., வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் போட்டியிடுகிறார்.

Update: 2024-04-15 16:42 GMT

தேர்தல் அறிக்கை வெளியிட்ட பாஜக வேட்பாளர் 

 ஊட்டி பா.ஜ.க., அலுவலகத்தில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கான தனது தேர்தலை அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு; நீலகிரியில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், உலக தரத்தில் சுற்றுலா மையம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

ஊட்டியில் சர்வதேச நிறுவனங்களின் ஆராய்ச்சி மையம் மற்றும் மேம்பாடு மையம் கொண்டு வரப்படும். ஊட்டியில் உலக தரம் வாய்ந்த படப்பிடிப்பு தளம், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்கான திரைப்பட நகரம் அமைக்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எச்.பி.எப்., தொழிற்சாலை நவீனமயமாக்கப்பட்டு, புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வரப்பட்டு,

வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். ஊட்டி காந்தலில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். மின் இணைப்பு இல்லாத குடியிருப்புகளுக்கும் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜல் ஜீவன் திட்டத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதி கொண்டு செல்ல முயற்சி எடுப்போம். மேட்டுப்பாளையத்தில் மிகப்பெரும் இடையூறாக உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு,

வெளி வட்ட சாலை அமைத்து தீர்வு காணப்படும். அவினாசி முதல் மேட்டுப்பாளையம் வரையிலான சாலை விரிவாக்க பணிகளும், மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு இரட்டை ரயில் பாதை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். நிலம்பூர் முதல் நஞ்சன் கோடு வரை கூடலூர் வழியாக புதிய ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாம்ராஜ் நகர் முதல் ஈரோடு வரையிலான ரயில்வே திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான ஒருங்கிணைந்த மையம் நிறுவப்படும். ஊட்டியில் சுற்றுலா வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக மல்டி லெவல் பார்க்கிங் வசதி அமைக்கப்படும்.

தேயிலைக்கு ஆதார விலை, அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சேமித்து வைக்கும் வகையில் அரசு குளிர்ப் பதன கிடங்குகள் அதிக இடங்களில் அமைத்து தரப்படும். நீலகிரி மாவட்டத்தின் பிரதான பயிரான பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டு,


தேயிலை விவசாயிகளின் துயர் துடைக்கப்படும். நீலகிரி மற்றும் சத்திய மங்கலத்தில் மூலிகை மற்றும் மருத்துவ தாவரங்களை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கப்படுவார்கள். ஜல் ஜீவன் திட்டத்தில் திட்டத்தில் பவானி நதியை சுத்தப்படுத்துவோம். அவினாசி நிலக்கடலை, மேட்டுப்பாளையத்தின் செங்காம்பு கருவேப்பிலை, பாக்குக்கு புவிசார் குறியீடு வாங்கி தர நடவடிக்கை எடுப்போம்.


வாழை மற்றும் மலர்கள் ஆராய்ச்சி நிலையங்கள், அதனை பதப்படுத்தும் கிடங்குகள் அமைத்து, ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நறுமண பொருட்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகள் அமைக்கப்படும். நெடுங்காலமாக கிடப்பில் இருக்கும் பாண்டியார்-புன்னம்புழா, பவானி ஆற்றுடன் இணைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். மேட்டுப்பாளையம்,


ஊட்டியில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படும். பிரதமரின் கேலோ இந்தியா திட்டத்தில் ஊட்டியில் தேசிய பயிற்சி மையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்களை கண்டுபிடித்து அவர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரியில் உள்ள இளைஞர்களை வேலை வாய்ப்புக்கு தயார் படுத்தும் வகையில் பயிற்சி மையங்கள் அமைத்து கொடுக்கப்படும். மேட்டுப்பாளையம், பவானி சாகர், அவினாசி, கூடலூர், ஊட்டி, குன்னூர் பகுதிகளில் ஒவ்வொரு மகளிர் கல்லூரிக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் எல்லாருக்கும் வீடு கட்டி தர நடவடிக்கை. பட்டா இல்லாதவர்களுக்கு இலவச பட்டாவோடு வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் மலைப்பகுதி மற்றும் சமவெளி பகுதிகளில் நவோதியா பள்ளிகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டுப்பாளையம், கூடலூர் அரசு மருத்துவமனை 24 மணி நேர சிகிச்சை மையம் கொண்டு வரப்படும். 6 தொகுதிகளிலும் எம்.பி., அலுவலகம் இருக்கும். ஹெலி - ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வரப்படும். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News