பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்கால் சாலை அமைக்கப்படுமா?

பேராவூரணி அருகே ஆனந்தவல்லி வாய்க்கால் கரையோரத்தில் தார்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-03 04:27 GMT

தார் சாலை அமைக்க கோரிக்கை 

பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்கால் கரையோரம் இரு புறமும் தார் சாலை உள்ளது. இந்த நிலையில் நீலகண்டபுரத்திலிருந்து ஆனந்தவல்லி வாய்க்கால் கரையோரம் உள்ள கப்பிக்கல் சாலை குண்டுங்குழியுமாக மேடு பள்ளங்களுடன் காட்சியளிக்கிறது. இந்த வழி கழனிவாசல், சோழகனார்வயல், கொரட்டூர், மணக்காடு, ரெட்டவயல் பகுதியை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.

இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் அடிக்கடி சென்று வருகிறது. குறிப்பாக இரவில் இந்த சாலையில் வரும்போது மேடு பள்ளங்களில் இருசக் கர வாகனங்கள் செல்லும் போது நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் கீழே விழுகின்றன. விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், கரும்பு, வாழை, உளுந்து, எள், காய்கறிகளை இந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களிலும் மூன்று சக்கவாகனங்களிலும் ஏற்றி பேராவூரணியில் உள்ள ஏலக்கடைகள் மற்றும் சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த சாலையில் ஆனந்தவல்லி வாய்க்கால் கரையோரம் வளர்ந்துள்ள ஆள் உயர செடிகளை வெட்டி அகற்ற வேண்டும். மேலும் போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் ஆனந்தவல்லி வாய்க்கால் கரையோரம் உள்ள கப்பிச்சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News