குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் பெண் பலி - அமைச்சர் நிவாரணம்
பவானிசாகர் அருகே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த அமைச்சர் முத்துசாமி ஆறுதல் தெரிவித்து நிவாரண நிதி வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் - பவானிசாகர் அருகே கோடேபாளையம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மனைவி துர்கா என்பவர் பிரசவத்திற்காக கடந்த 20-04-2024 ஆம் தேதி புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சுகப்பிரசவம் ஆனது.சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்து மூன்று நாட்கள் துர்காவும்,குழந்தையும் நன்றாக இருந்தனர்.
இந்நிலையில் கடந்த 24-04-2024 ஆம் தேதி துர்காவுக்கு மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தபோது மருத்துவர்களின் கவனக் குறைவால் துர்கா உயிரிழந்தார். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் உயிர் இழந்த துர்காவின் சொந்த ஊரான கோடேபாளையம் இல்லத்திற்கு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று துர்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். துர்காவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூ.25,000/= வழங்கினார். அப்போது சமூநீதி பாதுகாப்பு கூட்டமைப்பினர், விசிக மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் உடனிருந்தனர்.