திருவெறும்பூரில் முதல்முறையாக மகளிர் சபைக் கூட்டம்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்தில் முதல்முறையாக மகளிர் சபைக் கூட்டம் நடந்தது.
மகளிா் முன்னேற்றம் குறித்த தீா்மானங்களை நிறைவேற்றும் வகையில் மகளிா் சபைக் கூட்டங்களை அந்தந்த ஊராட்சிகளில் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கென ஊரக வளா்ச்சித் துறையின்கீழ் ஒரு பயிற்றுனரையும் அரசு நியமித்துள்ளது.
அதன்படி, திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வாழவந்தான்கோட்டை ஊராட்சியில் மகளிா் சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாநில முதன்மை பயிற்றுநா் பிரபாகரன் தலைமை வகித்து கூட்டத்தின் நோக்கம், இலக்கு, செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்கருப்பன், கூட்ட ஒருங்கிணைப்பாளா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், அனைத்து மகளிரிடையேயும் நமது பயன்பாடு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துதல், சாலைகள் இல்லாத பகுதிகளில் சாலைகளை அமைத்தல், கீழ்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைத்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் வேலைவாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மகளிா் திரளாக கலந்து கொண்டனா்.