கோவில் தெப்பக்குளத்தில் சடலமாக மிதந்த தொழிலாளி

கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு பகுதியில் வாலிபர் சடலம் மிதந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-10 13:07 GMT
தொழிலாளி பலி 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கோட்டாறு பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் சடலமாக மிதந்தார். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு இறந்து கிடந்தவர் யார் என  விசாரணை நடத்தினர்.        

இதில் சடலமாக மிதந்தவர் கோட்டார் வட்ட விளை பகுதியை சேர்ந்த ஐயப்பன் (40)என்பது தெரியவந்தது. இவர் மூடை தூக்கும் தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற ஐயப்பன் பின்னர் வீடு திரும்ப வில்லை.      

பல இடங்களில் அவரை தேடி வந்த நிலையில் இன்று காலை கோவில் தெப்ப குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், வலிப்பு நோய் பிரச்சினை இருந்து வந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.     

எனவே வலிப்பு வந்து குளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. உடலில் வேறு காயங்கள் ஏதும் இல்லை என போலீசார் தெரிவித்தனர். ஐயப்பன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News