தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளர்கள் ரயில் மோதி பலி
பொன்னேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் மீது ரயில் மோதியதில் சேலத்தை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சேலத்தை சேர்ந்த கஜல் நாயக்கன்பட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூரில் தங்கி புதிய கட்டிடத்தில் பெயிண்டிங் தொழில் செய்து வந்தனர் .பெயிண்டிங் வேலை முடிந்ததை தொடர்ந்து நான்கு பேர் கொண்ட குழுவினர் சொந்த ஊருக்கு செல்வதற்காக பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் செல்வதற்காக மூன்றாவது நடைமேடைக்கு செல்வதற்காக தொழிலாளர்கள் இருவர் பிளாட்பாரத்தில் இருந்து இறங்கி தண்டவாளத்தை கடந்தனர் அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தொழிலாளர்கள் இருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் ரயில் மோதி உயிரிழந்த பெயிண்டிங் தொழிலாளர்கள் சேகர் மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரது சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பெயிண்டிங் தொழில் முடித்து சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலையம் வந்த இருவர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பொன்னேரி ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.