உலக கடல்பசு தினம் - மணல் சிற்பம் அமைத்து விழிப்புணர்வு
உலக கடல்பசு தினத்தை முன்னிட்டு, பேராவூரணி அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரையில், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உருவாக்கிய கடல்பசு மணல் சிற்பம் முன்பு வன அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரையில், உலக கடல்பசு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு வனத்துறை, தஞ்சாவூர் வனக்கோட்டம் சார்பில், கடல்பசு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மனோராவை மையமாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு கடல்பசு பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளது. மேலும் அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல்பசுவை பாதுகாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும், மீனவர்கள் வலையில் சிக்கும் கடல்பசுவை உயிருடன் மீட்டு கடலில் விடும் மீனவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டி வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பேராவூரணி அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரையில் சுமார் 30 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்ட கடல்பசு உருவ மணல் சிற்பத்தை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி தலைமையிலான குழுவினர் சுமார் 1மணி நேரம் 30 நிமிடத்தில் தத்ரூபமாக உருவாக்கினர். தொடர்ந்து மனிதச் சங்கிலி அமைத்து கடல்பசுவை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வெளிவயல் கிராமத்தில், ஓம்கார் பவுண்டேஷன் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடல்பசு மற்றும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை மீட்டு, மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள் 9 பேருக்கு வனத்துறை சார்பில் 27 ஆயிரம் ரொக்கப் பணம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஓம்கார் பவுண்டேஷன் அமைப்பின் இயக்குநர் பாலாஜி வரவேற்றுப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி பேசுகையில், " தஞ்சை மாவட்டம் மனோரவை தலைமை இடமாகக் கொண்டு, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் வரை சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு, தமிழ்நாடு அரசு கடல் பசு பாதுகாப்பு மையத்தை அமைக்க உள்ளது. பாக் ஜலசந்தி கடல் பகுதியில் அருகி வரும் ஒரு அரிய கடல்வாழ் பாலூட்டி உயிரினமாக கடற் பசு உள்ளது. அவற்றின் வாழ்விடமான கடல் தாழைகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. கடல் வளத்திற்கு முக்கிய காரணமானது கடல் பசு. கடல் பசு பாதுகாக்கப்பட்டால் கடல் வளம் பாதுகாக்கப்படும். அதன் மூலம் மீனவர்கள் வாழ்வாதாரமும் பெரிதும் காப்பாற்றப்படும். நடப்பாண்டில் மற்றும் 3 கடல் பசு மற்றும் 10க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் உயிருடன் மீட்கப்பட்டு மீனவர்களால் கடலில் விடப்பட்டுள்ளது.அவர்களுக்கு தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை காப்பாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம்" என்றார்.
இதில், உதவி வனப்பாதுகாவலர் சாந்தவர்மன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல கணக்கு அலுவலர் பூபாலன், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன், வனவர் சிவசங்கர், இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆராய்ச்சியாளர் சுவேதா, உதவி ஆராய்ச்சியாளர் அஜித்குமார், நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத் தலைவர் ஜெயபால், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மீனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், மாணவ, மாணவிகள், மீன்வளத்துறை சாகர் மித்ரா பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஓம்கார் பவுண்டேஷன் மேலாளர் அன்பு நன்றி கூறினார்.