உலக முதலீட்டாளர்கள் மாநாடு தெருமுனைப் பிரச்சாரம்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தெருமுனைப் பிரச்சாரம்
கரூரில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 தெருமுனைப் பிரச்சார விழாவை துவக்கி வைத்து ரூபாய் 1,525.33 கோடி முதலீட்டில் 399 புதிய தொழில் நிறுவனங்கள் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பாக முதலீட்டாள்களை ஈர்க்கும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 தெருமுனைப் பிரச்சார விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கரூர் எம்பி ஜோதிமணி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட தொழில் மைய்ய பொது மேலாளர் ரமேஷ், தொழில் முதலீட்டாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் தங்கவேல், தமிழகத்தை தொழில் மிகை முன்னோடி மாநிலமாக மாற்றும் பொருட்டு, உலக முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் துவங்க ஈர்க்கும் நோக்கத்துடன், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஜனவரி 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் ரூபாய் 2,000 -கோடி அளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதனை செயல்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், இதுவரை கரூர் மாவட்டத்தில் 1525.33 கோடி முதலீட்டில் 399 புதிய தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டுள்ளன எனவும், இதன்மூலம் 11,652 நபர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.