வாலிபரை தாக்கி நகை பறிப்பு - அண்ணன், தம்பி மீது வழக்கு
இரணியல் அருகே முன்விரோதத்தில் இளைஞரை தாக்கி அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பியோடிய சகோதரர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள குதிரைப்பந்தி விளை பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் மகன் ஜெகதீஷ் (29) மரவேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான ஆனந்த், அனித் ஆகியோர்களிடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அங்குள்ள ஒரு புதுமனை புகுவிழா வீட்டிற்கு ஜெகதீஷ், நண்பர் திலீப் என்பவர் உடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்களை கல் மற்றும் கத்தியுடன் தடுத்து நிறுத்திய ஆனந்த் மற்றும் அனித் ஆகிய இருவரும் அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஜெகதீஷ் கழுத்தில் கிடந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயமடைந்த ஜெகதீசை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இது குறித்து இரணியல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ஆனந்த், அனித் ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.