சேலத்தில் குருப்பெயர்ச்சி பரிகார பூஜை

குருப்பெயர்ச்சியையொட்டி சேலத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று நடைப்பெற்ற சிறப்பு பரிகார பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2024-05-02 17:16 GMT

குருப்பெயர்ச்சி பரிகார பூஜை

குருபகவான் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடைவார். இதன்படி, குருப்பெயர்ச்சியையொட்டி நேற்று மாலை 5.19 மணிக்கு மேஷம் ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி சேலம் சுகவனேசுவரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், சிறப்பு பரிகார பூஜையும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்தனர்.

இதேபோல், சேலம் 2-வது அக்ரஹாரம் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலிலும் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. சீலநாயக்கன்பட்டியில் உள்ள குருபகவான் கோவிலில் உள்ள குருபகவானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும், அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. முன்னதாக பரிகார ராசிக்காரர்களுக்கு சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றது.

குருப்பெயர்ச்சியையொட்டி மாவட்டத்தில் உள்ள சிவன், குருபகவான் கோவில்களிலும் நேற்று மாலை சிறப்பு பூஜை நடந்தது. குருப்பெயர்ச்சியால் மேஷம், மகரம், விருச்சிகம், கன்னி, கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்றும், ரிஷபம், சிம்மம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு மத்திய பலன் கிடைக்கும் என்றும், தனுசு, துலாம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News