சேலம் அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - நோயாளிகள் ஓட்டம்

Update: 2023-11-22 05:20 GMT

வேறு வார்டுகளுக்கு மாற்றப்படும் நோயாளிகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு மேல் மாடியில் உள்ள எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை உள்நோயாளிகள் பிரிவில் திடீரென தீப்பற்றியது. பயங்கர புகையுடன் தீ பரவியதால் பணியில் இருந்த செவிலியர்கள் ,நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடிக்க தொடங்கினர்.இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு குழுவினர் உடனடியாக விரைந்து வந்து உள் நோயாளிகள் அனைவரையும் அதிரடியாக வெளியேற்றி அவசர அவசரமாக வேறு வார்டுகளுக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வார்டு பகுதி முழுவதும் புகைமூட்டம் காணப்படுவதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தீயை முற்றிலுமாக அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர். எலும்பு மூட்டு சிகிச்சை பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்ட நோயாளிகள் வேறு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நோயாளிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும் ஏசியிலிருந்து வெளியேறிய நச்சு புகையால் சில நோயாளிகளுக்கும், மீட்பு பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் உள்ள ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ சம்பவம் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிலைமையை சீர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு காணப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News