நான் எந்தத் தவறும் செய்யவில்லை: பாஜக அகோரம் அலறல்

தருமபுர ஆதீனத்தின் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை தனிப்படை போலீசார் மகாஷ்டிரா மாநிலத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2024-03-16 14:38 GMT
பாஜக மாவட்ட தலைவரை சிறைக்கு அழைத்து சென்ற போலீசார்

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் 27வது சன்னிதானம் மீது அவதூறு பரப்பும் வகையில் ஆபாச ஆடியோ, வீடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி கடந்த மாதம் 25ம்தேதி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ஆடுதுறை வினோத், ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் செந்தில், சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் சம்பாகட்டளை விக்னேஷ், செம்பனார்கோவி குடியரசு, நெய்குப்பை ஸ்ரீநிவாஸ், பாஜக மாவட்ட தலைவர் அகோரம்,

செய்யூர் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன், திருச்சி போட்டோகிராபர் பிரபாகரன், செம்பனார்கோவில் திமுக பிரமுகர் திருக்கடையூர் விஜயகுமார் ஆகிய 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் குடியரசு, விக்னஷ், வினோத், ஶ்ரீநிவாஸ் ஆகிய நான்கு பேரை கைது செய்து மயிலாடுதுறை கிளைசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 3 தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கில் தொடர்புடைய எஞ்சிய குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மும்பையில் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மயிலாடுதுறை குழந்தைகள் தடுப்பு குற்றபுலனாய்வு காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார் 8 பேர் அடங்கிய குழுவினர் வலை வீசி தேடிய போது பல மாநிலங்கள் சென்று இறுதியாக மகாராஸ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக் நகரில் உள்ள நாகோன் பீச்சில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. மயிலாடுதுறையிலிருந்து விமானத்தில் சென்ற செல்லும் தலைமையிலான 8 பேர் கொண்ட போலீசார் பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை லாட்ஜில் வைத்து கைது செய்தனர்.

தொடர்ந்து அலிபாக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறைக்கு அழைத்து வந்தனர். மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நீதிபதி இல்லாததால் திருச்சம்பள்ளியில் உள்ள தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கனிமொழி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். ஆஜராவதற்கு முன் தன்மீது போலீசார் பொய்வழக்கு போட்டுள்ளனர்,

நான் எந்த தவறும் செய்யவில்லை அகோரம் கத்தினார்.இந்த வழக்கை விசாரனை செய்த நீதிபதி கனிமொழி மார்ச் 28 ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து போலீசார் அகோரத்தை மயிலாடுதுறை கிளைச்சிறையில் அடைத்தனர். பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை பார்ப்பதற்காக வந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

தொடர்ந்து இவ் வழக்கில் அகோரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயபிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்; பாஜகவிற்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அகோரம் நீதிபதியிடம் தான் ஒரு குற்றமும் செய்யவில்லை என்றும் வழக்கில் உள்ள ஒருவரிடமும் செல்போனில் கூட பேசவில்லை தவறு செய்திருந்தால்,

எனக்கு உடனே தண்டனை கொடுங்கள் என்று நீதிபதியிடம் அகோரம் கூறியதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து மேலும் தகவலை பெறுவதற்கும் ஆதாரங்களை திரட்டுவதற்கும் வரும் திங்கட்கிழமை அவரை போலீஸ்காவில் எடுத்து விசாரிக்க மயிலாடுதுறை போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News