கன்னியாகுமரி: படகுத்துறையில் நிழல் பந்தல்
கன்னியாகுமரி படகுதுறை வளாகத்தில் வரிசையில் காத்திருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக நிழல் தரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் தற்போது கோடை விடுமுறை சீசன் தொடங்கி இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணமாக இருக்கிறார்கள். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகள் படகு துறையில் கொளுத்தும் வெயிலில் தவித்தபடி பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.
படகு துறையில் நிழல் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் வெயிலினால் சில நேரங்களில் மயங்கி விழும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் கன்னியாகுமரி படகுதுறை வளாகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக நிழல் தரும் வகையில் தார்பாய் மூலம் கூடாரம் அமைத்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் இந்த கூடாரத்தின் கீழ் வரிசையில் நின்றபடி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி படகுத்துறையில் நிழல் வசதி ஏற்படுத்தி இருந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.