மதுவில் கலப்படம் - டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம்

டாஸ்மாக் மதுவில் கலப்படம் செய்து விற்ற புகாரின்பேரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2024-05-15 06:41 GMT

நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வந்தன. இதில் 500 டாஸ்மாக் கடைகளை அரசு மூட உத்தரவிட்டது. கூடலூரில் காளம்புழா, ஊட்டி ஏ.டி.சி., பேருந்து நிறுத்தத்திலிருந்து சேரிங்கிராஸ் செல்லும் வழியில் உள்ள மதுபான கடை மற்றும் லோயர் பஜார் பகுதி என 3 கடைகள் கடந்த சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டு, தற்போது 73 கடைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் தினசரி 1.5 கோடிக்கு விற்பனை நடக்கிறது. ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மது விற்பனை எப்போதும் மும்முரமாக இருக்கும். முக்கிய இடத்தில் இருப்பதாலும் சீஸன் என்பதாலும் தினசரி உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து மது வாங்குவார்கள்.

இந்நிலையில் மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும், ஒரு சில நேரங்களில் போதை வஸ்துகளை தண்ணீரில் கலந்து, அதை மதுவில் கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஊட்டியில் உள்ள டாஸ்மாக் மேலாளரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள டாஸ்மாக் பறக்கும் படைக்கும் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் கடந்த 6-ம் தேதி சென்னையில் உள்ள டாஸ்மாக் பறக்கும் படையினர், ஊட்டி மணிக்கூண்டு டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்தனர். மேலும் மதுக்கடையில் இருந்து குறிப்பிட்ட மது வகைகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

இதில் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுவில், தண்ணீர் உள்ளிட்ட ஒருசில பொருட்கள் கலந்து விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மணிக்கூண்டு டாஸ்மாக் மதுக்கடையில் மேற்பார்வையாளர்களாக பணியாற்றி வந்த உமேஷ் மற்றும் சதீஷ் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து நீலகிரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக்கில் மதுவில் கலப்படம் செய்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் டாஸ்மாக் ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் சுற்றுலாத்தலமான நீலகிரியில் அவ்வப்போது டாஸ்மாக் மது கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News