செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்த அமைச்சர்கள்
தண்ணீர் இருப்பு குறித்து செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை நீர்வளத்துறை அமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:- சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். ஏரியின் தற்போதைய நீர் இருப்பு 23.30 அடியாகவும், கொள்ளளவு 3459 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து 3167 கன அடியாக உள்ளது. ஏரியிலிருந்து 2500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உபரிநீர் கால்வாய் (6.20 கி.மீட்டர்) செல்லும் கிராமங்களான காவனூர், சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதலம்மேடு மற்றும் திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்தார்கள். இவ் ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி , திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தைய்யா, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் , அசோகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் பொறியாளர் பொதுபணிதிலகம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.