மர்மமான முறையில் இளைஞர் உயிரிழப்பு: உடல் தோண்டி எடுப்பு
மர்மமான முறையில் இளைஞர் உயிரிழந்த நிலையில் உடல் உடற்கூறு ஆய்விற்காக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
அரூர் அருகே, மர்மமான முறையில் இறந்த தொழிலாளியின் உடலை, காவல் மற்றும் வருவாய் துறையினருக்கு தெரியாமல் புதைத்த அவரது மனைவி மீது, காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே கீரைப்பட்டி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (40). கூலி தொழிலாளி இவர், கடந்த 1ம் தேதி அவரது வீட்டின் முன்புறம் உள்ள வள்ளிமதுரை பாசன கால்வாயில் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது உடலை மீட்ட குடும்பத்தினர், காவல் மட்டும் வருவாய்த் துறைக்கு தெரிவிக்காமல் புதைத்து விட்டனர். இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார், அரூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில், சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த ராஜாவின் உடலை, காவல் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதன் .பேரில், ராஜாவின் மனைவி கனகா (34) மற்றும் உறவினர்கள் சிலர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து, அரூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்ததாக உயிரிழந்த ராஜாவின் தயார் ராதா மணி கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் அரூர் வருவாய் வட்டாட்சியர் கனிமொழி, தலைமையிலான காவல் ஆய்வாளர் பாஸ்கரபாபு ,மரு. வசந்த, மூத்த மருந்தாளுனர் கோவிந்தராஜ், உள்ளிட்ட, குழுவினர்கள் அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்து உடற் கூறு ஆய்வு செய்தனர்.
உடற் கூறு ஆய்வுக்கு பின் மீண்டும் உடலை அடக்கம் செய்தனர். உடற் கூறு ஆய்வுகள் குறித்து காவல் மற்றும் வருவாய் துறையிடம் கேட்டபோது உடலுறுப்புகள் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்படுகிறது. அதன் பிறகு வரும் தகவலை பொறுத்துத்தான் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தனர். தனது தந்தை உயிரிழந்தது தெரியாமல் அவரது பிஞ்சு குழந்தைகள் வீட்டின் முன்பு அமர்ந்து கொண்டு சைக்கிள் ஓட்டிக்கொண்டு விளையாடுவதை பார்த்த மக்கள் கதறி அழுத சம்பவம் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.