கடன் தொல்லையால் தற்கொலைகள் - கிராம மக்கள் எடுத்த முடிவால் பரபரப்பு
சிவகாசி வட்டாரத்தில் பட்டாசு தொழில் முடங்கியதால் கடன் தொல்லையால் அடுத்தடுத்து தற்கொலை சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் மீனம்பட்டி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் அதிகப்படியான கடன் பிரச்னையால் ஆசிரியர் லிங்கம், பழனியம்மாள் தம்பதியினர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டனர் இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் மறைவதிற்குள் சிவகாசி அருகே மீனம்பட்டி திடீர் காலனியை சோ்ந்த 6.06.24 தேதி ஜெயசந்திரன் மனைவி ஞானபிரகாசி,இவரது மகள் சா்மிளா 2பேரும் கடன் தொல்லையால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.இந்த தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மீனம்பட்டி கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சார்பாக ஊர் நாட்டாமை ஞானம்,கணக்கர் பன்னீர்செல்வம் பெயரில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில்,நமது மீனம்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழில் முடங்கப்பட்டுள்ளதால் தற்சமயம் நம் மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் கடன்காரர்கள் மற்றும் குழுக்காரர்கள் 5.6.2024 முதல் 5.7.2024 வரை கடன் வசூலிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அறிவிப்பு எழுதப்பட்டதால் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.