வந்தே பாரத் ரயில் - மகிழ்ச்சியுடன் வரவேற்ற தர்மபுரி மக்கள்
வந்தே பாரத் ரயிலை வரவேற்க்கும் விதமாக பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன
வந்தே பாரத் ரயில் - மகிழ்ச்சியுடன் வரவேற்ற தர்மபுரி மக்கள். பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 6 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களையும், இரண்டு அம்ரித் பாரத் ரயில்களையும் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதில் கோவையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடி அசைத்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயில் தர்மபுரி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. தர்மபுரி மாவட்ட மக்கள் இந்த ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர்.
வந்தே பாரத் ரயிலை வரவேற்க்கும் விதமாக பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தர்மபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் எஸ் செந்தில்குமார் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தே பாரத் ரயில் தர்மபுரியில் நின்று செல்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கினார். தர்மபுரி வளர்ச்சிக்கு இந்த ரயில் பெரிதும் பயன்படும் என்றும் அவர் தெரிவித்தார். நாள்தோறும் கோவையில் காலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக தர்மபுரிக்கு காலை 8.30 மணிக்கு வந்தடையும். இரண்டு நிமிடங்கள் தர்மபுரி ரயில் நிலையத்தில் நின்று காலை 8.32 மணிக்கு மீண்டும் புறப்படும்.
வந்தே பாரத் ரயில் ஓசூர் வழியாக பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கு காலை 11:30 மணிக்கு சென்றடையும். மேலும் வந்தே பாரத் ரயில் பெங்களூரில் இருந்து பிற்பகல் 1:40 மணிக்கு புறப்பட்டு ஓசூர் வழியாக தர்மபுரிக்கு மாலை 4. 14 மணிக்கு வந்தடையும். மீண்டும் மாலை4.16 நிமிடங்களுக்கு தர்மபுரியில் இருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக 8 மணிக்கு கோயம்புத்தூர் ரயில்வே சந்திப்பபை சென்றடையும். முக்கிய நகரங்களான பெங்களூரு மற்றும் கோவை நகரங்களை இணைக்கும் இந்த வந்தே பாரத் ரயில் தொழில் வளர்ச்சிக்கும், மருத்துவ சேவைகளுக்கும், குறிப்பாக விவசாயிகளுக்கும் பெரிதும் பயனளிக்கும்.
கோவையிலிருந்து இருந்து பெங்களூருக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலை மக்களவை உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமார் வரவேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் தெரிவிக்கையில் கோவையிலிருந்து பெங்களூர் செல்லும் வந்தே பாரதி ரயில் தர்மபுரி ரயில் நிலையத்தில் நின்று செல்வதால் தர்மபுரி மாவட்டம் வர்த்தக ரீதியில் வளர்ச்சி அடையும். மற்ற ரயில்களை காட்டிலும் அதி விரைவாக செல்வதால், பொதுமக்களுக்கு பெரும் உதவியாக அமையும்.
தர்மபுரியில் இந்த வந்தே பாரத் ரயில் நின்று செல்ல பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அடுத்து பெங்களூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயிலும் தர்மபுரியில் நின்று செல்வதற்கு மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் தர்மபுரிக்கு இன்று முதன்முறையாக வருவது குறித்து பொதுமக்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். பெங்களூரு ரயில்வே கோட்ட உதவி பொது மேலாளர் அசுஸ்தோஷ் மாத்தூர், பொதுமக்கள், உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி மாணவ மாணவியரின் நாட்டுப்பற்று மிக்க கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.