நகராட்சியில் தேவையற்ற மின் கட்டணங்கள் குறைக்க வேண்டும் - நகர மன்ற உறுப்பினர் கோரிக்கை
நாமக்கல் நகர மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் து.கலாநிதி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் எஸ்.பூபதி, ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் நாமக்கல் நகராட்சிக்கு லாபம் ஈட்டும் வகையில் பல்வேறு கோரிக்கைகள் விடுத்துள்ளனர். கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் எம்பரர் வ.இளம்பரிதி பேசுகையில், நாமக்கல் நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் இல்லாத பழைய ஆழ்குழாய் கிணறுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் உள்ளது. இதற்காக நகராட்சி சார்பில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. மின் இணைப்பை துண்டித்தால் இதற்காக செலுத்தப்படும் மின் கட்டணம் நகராட்சிக்கு கிடைக்கும். எனவே, மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
மேலும் நகராட்சியில் 50 சதவீதத்திற்கும் மேல் பல இடங்களில் தெருவிளக்குகள் வணிக கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. எனவே வணிக கட்டணம் அல்லாத மின் இணைப்பாக மாற்றினால் நகராட்சிக்கு இதன் மூலம் பெரிய தொகை மீதமாக்கப்படும். அதேபோல நகராட்சியில் பல இடங்களில் 5 K V மின் இணைப்பு தேவைப்படும் இடத்தில் 15 K V மின் இணைப்பு உள்ளது. இதனால் தேவையில்லாமல் அதிகப்படியான மின் கட்டணம் நகராட்சி மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. எனவே மின் இணைப்பு மாற்றி அமைத்தாலும் மற்றும் மின் இணைப்பை துண்டித்தாலும் நமது நாமக்கல் நகராட்சிக்கு வருவாய் சேமிப்பு கிடைக்கும் என்றார்.
நகர் மன்ற உறுப்பினர் டி.டி சரவணன் பேசும்போது, நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் டெங்கு விழிப்புணர்வுக்கு ஆட்களை அனுப்பி வைக்க வேண்டும் மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்ய தனியாரிடமிருந்து வாகனம் பெறப்பட்டு அதற்காக அதிக வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. எனவே தனியாருக்கு வழங்கும் வாடகையை குறைக்க வேண்டும் என்றார்.
நகர மன்ற உறுப்பினர் ப.நந்தகுமார் பேசும்போது, நல்லிபாளையம் சர்வீஸ் ரோடு பகுதிகளில்குப்பைகள் அதிகமாக தேங்கியுள்ளது. மேலும் இச்சாலையில் இரவு நேரத்தில் மின் விளக்குகள் இல்லாமல் உள்ளது எனவே இப்பகுதியில் சாலையின் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து நகர மன்ற உறுப்பினர் எம்பரர் வ.இளம்பரிதி பேசும் போது, நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் அமைந்திருக்கும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு கல்லூரிக்கு பின்புறம் சுற்றுச்சூழல் மற்றும் கடந்த 30 ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் இல்லாமல் உள்ளது. வருவாய்த்துறையின் கீழ் உள்ள இப்பகுதியை வருவாய்த் துறையிடம் இருந்து நகராட்சி பெற்று கழிவுநீர் கால்வாய் அமைத்து சாலை அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் இப்பணிக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அதற்கான நிதியை வழங்குகிறேன் என உறுதி அளித்தார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பொறியாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.