போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் -மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

போதைப்பொருள் பயன்பாட்டிற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2023-12-05 14:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரட்டவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் மது அருந்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை இன்று துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் பேசியதாவது: இப்பள்ளியானது சிறப்புக்குரிய பள்ளி. ஏனென்றால் பல்வேறு தலைவர்கள் வருகை தந்த பள்ளி. மாணவர்கள் பள்ளி பருவ வயதில் தேவை இல்லாத மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது என்பது தான் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம்.

காலங்காலமாக இந்த நிகழ்வு இருந்தாலும், இந்த ஓராண்டு காலத்தில் மாநிலத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போதை பொருட்கள் பயன்பாடு இருக்கக்கூடாது எனவும், மாணவ, மாணவிகள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நமது மாவட்டத்தில் இது போன்ற போதைப் பொருட்கள் கடைகளில் விற்பனை செய்தால் கடைகளை மூடவும், அதிகப்பட்ச தண்டனையை வழங்கவும், மேலும் நமது சுற்றுப்புறத்தை சார்ந்தவர்கள் மற்றும் குடும்பத்தை சார்ந்தவர்கள் இதுபோன்ற போதை பொருள் பழக்கங்களில் ஈடுபட்டுருந்தால் மாணவர்களாகிய நீங்கள் போதை பழக்கத்தின் தீமைகளை எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

இந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாரயம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதை கண்டுபிடித்து அதை அழித்துயிருக்கிறோம். மேலும் குழந்தைகளாகிய நீங்கள் படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் காலை சிற்றுண்டி திட்டம், அரசு பள்ளியில் 12 வகுப்பு வரை தமிழ்வழி கல்வி பயின்று முடித்த மாணவிகள் கல்லூரி உயர்கல்வி படிப்பதற்கு புதுமைப்பெண் திட்டம், கல்லூரியில் படிப்பவர்களுக்கு நான் முதல்வன் திட்டம், இலவச புத்தகம், இலவச சீருடை, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார். இதனை தொடர்ந்து 2022-2023 ஆம் கல்வியாண்டில் மாணவர்களை 100 சதவீத தேர்ச்சி மற்றும் மாணவர்களை 100 மதிப்பெண் எடுக்க வைத்த பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு, மேலும் போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி, துணை ஆட்சியர் மற்றும் உதவி ஆணையர்(கலால்) கோ.குமரன், மாவட்ட கல்வி அலுவலர் கி.காளிதாஸ், பள்ளி தலைமையாசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News