நெல்சாகுபடியில் நுண்ணூட்டச்சத்தின் அவசியம் - வேளாண் உதவி இயக்குநர்

நெல்சாகுபடியில் நுண்ணூட்டச்சத்தின் அவசியம் என நாமக்கல் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் கூறினார்

Update: 2024-01-19 08:52 GMT


நெல்சாகுபடியில் நுண்ணூட்டச்சத்தின் அவசியம் என நாமக்கல் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் கூறினார்


நெல்சாகுபடியில் நுண்ணூட்டச்சத்தின் அவசியம் ! விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் தகவல் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது .... நெல்சாகுபடியின் போது வயலில் தொடர்ந்து தண்ணீர் தேக்கி வைப்பதால் நிலத்தில் உள்ள நுண்ணூட்ட சத்தான துத்தநாகம், துத்தநாக சல்பேட்டாகவோ அல்லது துத்தநாக கார்பனேட்டாகவோ மாற்றம் அடைகிறது. இதனால் பயிருக்கு கிடைக்க வேண்டிய துத்தநாகத்தின் அளவு குறைந்து துத்தநாகச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. பற்றாக்குறை அறிகுறிகள் :- நெற் பயிரில் துத்த நாகசத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதா? என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது, நாற்று நட்ட பின்பு 3 முதல் 4 வாரத்திற்குள் தோன்றும் இளம் இலைகளின் நடுநரம்பு அடிப்புறத்தில் இருந்து வெளுத்து காணப்படும். மேல்புறம் மற்றும் நடுப்பகுதி இலைகளில் பழுப்பு நிறபுள்ளிகள் தோன்றும். இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பழுப்படைந்து காய்ந்துவிடும். பயிர்கள் சீராக வளராமல் திட்டு திட்டாக வளர்ச்சி குன்றி காணப்படும். பயிர்கள் வளரும் போது இந்த குறைபாடு தானாக மறைந்தாலும், பயிரின் விளைச்சல் குறைந்து விடும். கட்டுப்படுத்தும் முறைகள் :- நெல் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், தங்கள் நிலத்தில் தொடர்ந்து நெற்பயிரையே சாகுபடி செய்யாமல், இடை இடையே பயறு வகை பயிர்கள் உள்ளிட்ட மாற்றுப்பயிர் சாகுபடியினை மேற் கொள்ள வேண்டும். வயலில் தொடர்ந்து தண்ணீர் தேங்காமல் தண்ணீரை வடிந்து போக செய்து, நிலத்தில் ஈரப்பதம் மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பசுந்தாள் மற்றும் அங்கக உரங்களை அதிக அளவில் வயலில் இட வேண்டும். நாற்று நடுவதற்கு முன்பு துத்தநாக சல்பேட்டை ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் 20 கிலோ மணலுடன் கலந்து இட வேண்டும். நாற்று நடும் பொழுது நாற்றின் வேர்ப் பகுதியை 1 சதவீதம் துத்தநாக சல்பேட் கரைசலில் 10 நிமிடங்கள் நனைய வைத்து பின்னர் நடவு செய்ய வேண்டும். துத்த நாகசத்து பற்றாக்குறை அறிகுறிகள் தென்பட்டால் 0.5சதவீதம் துத்த நாக சல்பேட் கரைசலை 0.25 சதவீதம் தெளிந்த சுண்ணாம்பு கரைசல் சேர்த்து ஒரு வார இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும். இதன் மூலம் நெற் பயிரில் துத்தநாகச் சத்து குறைபாடு ஏற்படுவதை கட்டுப் படுத்தி பயிர் மேலாண்மை செய்து மகசூலை அதிகரிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News