திருவானைக்கோவில் பகுதியில் அடிமனை பிரச்சனை

திருவானைக்கோவில் பகுதியில் அடிமனை பிரச்சனை குறித்து பொதுமக்கள் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

Update: 2024-02-05 14:53 GMT


திருவானைக்கோவில் பகுதியில் அடிமனை பிரச்சனை குறித்து பொதுமக்கள் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணை செயலாளர் திருவானைக்காவல் மாரி என்கிற பத்மநாபன் தலைமையில் பொதுமக்கள் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;- திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் பகுதியில் அடிமனை பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திருவானைக்கோவில் நிர்வாகம் சார்பாக அந்த கோவிலை சுற்றியுள்ள காலி மனைகள் குடியிருப்பு பகுதிகள் கோவிலுக்கு சொந்தமானது என்றும் தெரிவித்துள்ளது.

ஆகவே இந்த இடங்களில் வசிப்பவர்கள் தங்களுடைய இடத்தினை வேறு நபருக்கு கிரையம் கொடுக்க முடியாமலும், வாங்க முடியாமலும், வங்கியில் வீட்டு கடன் பெற முடியாமல் கஷ்டமான சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளோம். இந்த நிலையில் திருவானைக்கோவில் பகுதியில் உள்ள 2068, 2069 சர்வே எண்களில் உள்ள நிலம் அரசு புறம்போக்கு நிலமா அல்லது கோவிலுக்கு சொந்தமான நிலமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இது தொடர்பான நீதிமன்ற உத்தரவில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்த இடத்தினை இறுதி செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே திருவானைக்கோவில் கோவில் நிர்வாகம் சார்பாக ஸ்ரீரங்கம் சார் பதிவாளருக்கு அனுப்பிய செயல்முறை உத்தரவை ரத்து செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண்களில் வசிக்கும் பொது மக்களாகிய எங்களுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களின் ஆவணங்களை பரிசீலனை செய்தும் கோவில், ஆவணங்களை பரிசீலனை செய்தும், எங்களுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை கிரையும் பெறுவதற்கும் கொடுப்பதற்கும் மற்றும் பத்திர பதிவுகள் செய்வதற்கும் வழிவகை செய்து எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News