மூங்கில்துறைப்பட்டில் நான்கு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு
மூங்கில்துறைப்பட்டில் நான்கு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா.
By : King 24x7 Angel
Update: 2024-02-24 10:29 GMT
மூங்கில்துறைப்பட்டில் நான்கு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி வரை நான்கு வழிச் சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மூங்கில்துறைப்பட்டில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டுவதற்கான பணி நடைபெற உள்ளது. இதனால், அண்ணாநகர் பகுதியில் உள்ள வீடுகள் இடிக்க நேரிடும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் கடந்த ஒரு மாதமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மூங்கில்துறைப்பட்டில் நான்கு வழிச் சாலைக்கான அளவீடு பணி நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் தேசிய நெடுஞ்சாலைக்கு உரிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவிப்பு செய்தனர். இதனால், ஆத்திரமடைந்த அண்ணா நகர் பகுதி மக்கள் நேற்று காலை 10:00 மணியளவில், அண்ணா நகர் நுழைவுவாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், வி.ஏ.ஓ., முருகன் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த தி.மு.க., ஒன்றிய செயலாளர் அசோக்குமார், வரும் 26ம் தேதி வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., இப்பகுதிக்கு வருகிறார். அவரிடம் குறைகளைத் தெரிவியுங்கள் என்று கூறினர்.