பாவை கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கான ஊக்குவித்தல் சொற்பொழிவு! வனிதையே... வாகைசூடு!!

Update: 2024-02-26 04:59 GMT

பாவை கல்வி நிறுவனங்களில் பெண் முன்னேற்றத்திற்கான பாவையின் குறிக்கோள் என்ற அமைப்பின் அடிப்படையில் "வனிதையே...வாகைசூடு" என்ற தலைப்பில் ஊக்குவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழா இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் அவர்கள் தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வேதாத்திரி பேச்சு அறிவாற்றல் வளர்ச்சி மையத்தின் இயக்குநரும், பட்டிமன்ற பேச்சாளருமான கே.நாகநந்தினி அவர்கள் கலந்து கொண்டு உரையாடி பயிற்சியளித்தார்.

மூன்றாமாண்டு இளங்கலை வணிகப் பயன்பாட்டியல் துறை செல்வி.சி.ஏ.பிரித்திகா வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார். பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினை சிறப்பித்து வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் கே.நாகநந்தினி அவர்கள் தம் சிறப்புரையில், உற்சாகமும், ஆர்வமும் ததும்பும் பாவை மாணவிகளாகிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள். மகன் தந்தைக்காற்றும் உதவி… என்ற குறளிற்கேற்ப மாணவிகளாகிய நீங்கள் தன்னம்பிக்கையோடு, உயரங்களுக்குச் சென்று சாதனைப் புரிந்து உங்கள் கல்லூரிக்கு பெருமைச் சேர்க்க வேண்டும். என் அருமை மாணவிகளே, நம் சமூகம் தாய்வழி சமூகமாகும். மேலும் வாழ்வின் ஆதாரமாக பெண்களே திகழ்கிறார்கள். பெண் என்பவள் மனதளவில் சோர்வில்லாதவள்.அதிகாரமும், ஆளுமையும் கொண்டு தைரியத்தோடு பிரச்சனையை எதிர்கொள்பவள். மேலும் கஷ்டங்களை எதிர்கொண்டு தன்னையும் காத்து, பிறரையும் காக்கும் இயற்கை குணம் பெண்களிடத்தில் உண்டு. எனவே பெண்களாகிய நீங்கள் அதனை உணர்ந்து நேரத்தை வீணடிக்காமல், கிடைக்கும் வாய்ப்புகளை தக்க நேரத்தில் சரியாக பயன்படுத்த வேண்டும். எப்பொழுதும் உங்களுக்கென்று தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும். அதற்கு நீங்கள் போராட்ட குணமும், சாமர்த்தியமும் கொண்டவர்களாக திகழ வேண்டும். நீங்கள் வெற்றி பெறும் போது தான் உங்களை சமூகம் அடையாளம் கண்டு, அடுத்த தலைமுறைக்கும் முன்னோடியாக திகழ முடியும். நீங்கள் சாதிக்க முற்படும் போது உங்களை நோக்கி விமர்சனங்களும், தடைகளும் வரலாம். அதனை நீங்கள் மேற்கொள்ளும் போது தான் உங்களின் தனித்துவமும், திறமையும் வெளிப்படும். மேலும் நீங்கள் வெற்றி பெற்ற பின்பு பொய்யான புகழ்ச்சிக்கும், வஞ்சக வார்த்தைகளுக்கும் நீங்கள் செவிசாய்க்கக் கூடாது. நீங்கள் வாகை சூடிய பெண்களாக திகழும் போது, மேற்சொன்னவைகளை பின்பற்றினால் உங்களால் தொடர்ந்து வெற்றியில் நிலைத்திருக்க முடியும். நீங்கள் எப்பொழுதும் வெற்றியாளர்களாக முன்னேற உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்று பேசினார். முன்னதாக பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தாளாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு மற்றும் பொன்னாடை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிருஷ்டி…24 என்ற கலாச்சாரக் கலைவிழாவில் வெற்றி பெற்றி மாணவிகளுக்கு வெற்றிக் கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிறைவாக மூன்றாமாண்டு இளங்கலை வணிகவியல் மாணவி செல்வி.கே.எஸ்.ஜனணி நன்றி நவிழ நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் நிர்வாகம் முனைவர் கே.கே.இராமசாமி, முதன்மையர்கள், அனைத்து கல்லூரி முதல்வர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எம்.மோகன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News