அரசு மருத்துவமனையில் இடையீட்டு சேவை மையம் துவக்கம்

துவக்கம்

Update: 2024-07-31 00:14 GMT
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் குழந்தைகள் நல பிரிவில் இயங்கும் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் துவக்க விழா நடந்தது. கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலை அரசு மருத்துவமனையில் சிறு குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்பட்டிருக்கும் உடல் உபாதைகளை நோய் முற்றுவதற்கு முன்னதாகவே கண்டறிந்து சிகிச்சை அளித்து சீர் செய்யும் இடையீட்டு சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லுாரி முதல்வர் நேரு துவக்கி வைத்தார். மருத்துவ கண்காணிப்பாளர் பழமலை, நிலைய மருத்துவ அலுவலர் பொற்செல்வி முன்னிலை வகித்தனர். உதவி நிலைய மருத்துவர் முத்துகுமார் வரவேற்றார். மத்திய அரசின் ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரியக்ரம் திட்டத்தின் (ஆர்.பி.எஸ்.கே) மூலம் துவங்கப்பட்டுள்ள இந்த மையத்தில் பிறவியிலேயே காது கேளாதவர்கள், கண்பார்வை குறைபாடு, மூளைவளர்ச்சி இன்மை, மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு அந்தந்த துறை மருத்துவர்கள், நுட்புனர்களால் சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பல் மருத்துவம், இயன்முறை சிகிச்சை மற்றும் ஆய்வக வசதி போன்ற அனைத்து பிரிவுகளும் இங்கு உள்ளது. இதனால், தாய்மார்கள் தங்களின் 14 வயதுக்கு உட்பட்ட சிறு குழந்தைகளின் பிறவிக்குறைபாடுகளை முன்னதாக அறிந்து பிரச்னைகளை தீர்க்க உதவியாக இருக்கும். எனவே இதனை முழுமையாக பயன்படுத்திகொள்ள வேண்டும் என டாக்டர் நேரு தெரிவித்தார்.

Similar News