ரிஷிவந்தியம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஞானசேகரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு சாப்பிடும் 350 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா இணை சீருடைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கலெக்டர் பிரசாந்த் பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின் பள்ளி மாணவர்களின் நலன் கருதி இல்லம் தேடி கல்வி, காலை உணவு திட்டம் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் தைக்கப்பட்ட விலையில்லா இணை சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 974 பள்ளிகளில் பயிலும் 44,573 மாணவர்கள், 50,247 மாணவிகள் என, மொத்தமாக 94,820 மாணவ, மாணவிகளுக்கு நடப்பாண்டில் 4 இணை சீருடைகள் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்றுக்கொண்டு பல்வேறு துறைகளில் சாதித்து, சிறந்து விளங்க வேண்டும்' என்றார்.