கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை ஆடி 18 அன்று, அதிகாலை 5 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். மதியம் 2 மணிக்கு சோமாஸ்கந்தர் பல்லக்கில் வீதி உலா மற்றும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.
கொல்லிமலை ஒன்றியம் வளப்பூர் நாடு ஊராட்சி பெரிய கோவிலூரில் உள்ள வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இயற்கை வளம் நிறைந்த, வளப்பூர்நாடு, பெரிய கோயிலூரில், வரலாற்று சிறப்பு பெற்ற அறம் வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீ அறப்பளீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலில் ஆடி 18ம்பெருக்குத் திருவிழா சிறப்பாக நடைபெறும்.இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, 31ம் தேதி, காலை 9 மணிக்குத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று ஆகஸ்ட். 1ம் தேதி வியாழக்கிழமை காலை 10.40 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது, மாலை 5 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் நடைபெறும்.ஆகஸ்ட்.2ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மாலை சுவாமி திருக்கல்யாண உற்சவம் மற்றும் வீதி உலா நடைபெறும். ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை ஆடி 18 அன்று, அதிகாலை 5 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். மதியம் 2 மணிக்கு சோமாஸ்கந்தர் பல்லக்கில் வீதி உலா மற்றும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். ஆகஸ்ட் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி மற்றும் 11 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெறும்.தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு வசந்த உற்சவ அபிஷேகம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா, கோயில் செயல் அலுவலர் சுந்தரராசு மற்றும் திருக்கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.