தீபாவளிக்கு தேனி மாவட்ட மலைக் கிராமங்களிலும் வனச்சாலையிலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு முழுவதும் கடைபிடிக்கப்படும் விதிமுறைதான்
தீபாவளிக்கு தேனி மாவட்ட மலைக் கிராமங்களிலும் வனச்சாலையிலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ராக்கெட் வெடி வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மலைகள் சூழ்ந்த மாவட்டமாக தேனி அமைந்துள்ளது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வருசநாடு, மேகமலை, குமுளி, தேவாரம், போடிமெட்டு, தேவதானப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு வனத்துறை சட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வனத்துறையினரின் கண்காணிப்பும், கட்டுப்பாடும் இங்கெல்லாம் அதிகம். மேகமலை, வெள்ளிமலை, அகமலையைப் பொறுத்தளவில் சோதனைச்சாவடி அமைத்து இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், குமுளி, போடிமெட்டு, கம்பம்மெட்டு மலைச்சாலையில் செல்ல வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் உள்ளன.இதேபோல் இங்கெல்லாம் பட்டாசு வெடிக்கவும் தடை உள்ளது. குறிப்பாக, ராக்கெட் வெடி காட்டுக்குள் தூரமாகச் சென்று விழுவதால் தீப்பற்றுவதை உடனடியாக பார்க்க முடியாது. இதனால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் நாளை மறுநாள் தீபாவளி என்பதால் பலரும் பட்டாசு வெடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மலைக்கிராமங்களில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பிலும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ''ஆண்டு முழுவதும் கடைபிடிக்கப்படும் விதிமுறைதான் இது. இருப்பினும் தீபாவளி கொண்டாட்ட மனநிலையில் சிலர் மலைச்சாலையில் பட்டாசுகளை வெடிக்கின்றனர். இதில் ராக்கெட் வெடிதான் மிக மோசம். தூரமாகச் சென்று காட்டுப்பகுதியில் இதன் தீப்பொறிகள் விழுவதால் தீப்பற்றுவதை உடனடியாக உணர முடியாது. ஆகவே கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுஎன்றனர்