சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரண்டு இளநீர் வைத்து பூஜை
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் இரண்டு இளநீர் வைத்து இன்று முதல் பூஜை செய்யப்படுகிறது. முருகப்பெருமானின் உத்தரவினால் இளநீர் வைத்து பூஜை செய்வதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தும் மழை பெய்து விவசாயம் செழித்திடும் என்று முருக பக்தர்களும், சிவச்சாரியார்களும் தெரிவிக்கின்றனர்
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் சிவவாக்கிய சித்தர் அருள் பெற்ற தலமாகவும், விநாயகப் பெருமான் முருகனை வணங்கும் தளமாகவும் விளங்குகிறது. நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால் இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்கி வருகின்றது. சுப்பிரமணிய சுவாமியை பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை கூறி அதை கோவில் முன் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள (கண்ணாடி பேழைக்குள்) உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர்கள் கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் சுவாமி இடம் பூ கேட்டு பூ கொடுத்த பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் பக்தர்களின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம் எதிர்மறையாகவும் இருக்கலாம். முந்தைய காலங்களில் சைக்கிள் வைத்து பூஜை செய்யப்பட்ட போது நவீன வாகனங்களில் பெருக்கத்தால் சைக்கிளின் பயன்பாடு குறைந்து போனது. துப்பாக்கி தோட்டா வைத்து பூஜை செய்யப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டது அதில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. மண் வைத்து பூஜை பட்ட போது ரியல் எஸ்டேட் தொழில் சூடு பிடித்து நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. தண்ணீர் வைத்து பூஜை செய்யப்பட்ட போது சுனாமி ஏற்பட்டு நீரினால் ஏராளமானோர் மடிந்ததாகவும் பக்தர்கள் தெரிவித்தனர். கடந்த முறை ஏப்ரல் 24ஆம் தேதி முதல் தாராபுரம் நாச்சிமுத்து புதூர் பகுதியைச் சேர்ந்த சபாபதி (வயது 48) என்பவரின் கனவில் உத்தரவு பொருளாக வேல் வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே ஊஞ்சபாளையம் பகுதியைச் சேர்ந்த கணபதி (51) என்பவரின் கனவில் இரண்டு இளநீர் வைத்து பூஜை செய்யச் சொல்லி சிவன்மலை சுப்பிரமணிய சாமி குழந்தை ரூபத்தில் கூறியதாகவும் அந்தக் கனவை கணபதி பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் மீண்டும் அடுத்த நாள் அதிக சத்தத்துடன் மிரட்டும் பாணியில் சிவன்மலையில் கொண்டு போய் இரண்டு இளநீரை வைத்து விட்டு வா என முருகப்பெருமானே நேரில் தெரிவித்ததாகவும் இதை அடுத்து அதிர்ச்சியடைந்த கணபதி இரண்டு இளநீரை வாங்கிக்கொண்டு சிவன்மலை கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்ததாகவும், பின்னர் ஆண்டவன் சன்னதியில் பூ கேட்கப்பட்டு உத்தரவு கொடுத்த பின்னர் உத்தரவு பெட்டிக்குள் இரண்டு இளநீர் வைத்து பூஜிக்கப்பட்டு வருகின்றது. மேலும் தற்போது நல்ல மழை பொழிந்து வருவதாகவும் இதனால் விவசாயம் செழித்து விலங்கிடும் எனவும் மேலும் தென்னை விவசாயம் அதிகரிக்கவும் இளநீர் நல்ல விலைக்கு விற்பனை நடைபெறும் போவதாகவும் கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் தெரிவித்தனர். மேலும் பல்வேறு நோய்நொடிகளுக்கு அருமருந்தாகவும் இளநீர் குடிக்க சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தும் அமுதபானமாக இளநீர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.