தப்பி ஓட முயன்ற குற்றவாளி கீழே விழுந்து கால் முறிவு
காளையாா்கோவில் அருகே கஞ்சா கடத்தல் வழக்கில் பிடிபட்ட ஒருவா், போலீஸாரிடமிருந்து தப்பியோட முயன்ற போது, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே காளக்கண்மாய் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 17-ஆம் தேதி போலீஸாா் அந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரில் 20 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரில் இருந்த அகிலன் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றாா். காவல் ஆய்வாளா் ஆடிவேல், அகிலனை காலில் சுட்டுப் பிடித்தாா். இதற்கிடையில் காரில் இருந்த மேலும் இருவா் தப்பித்து ஓடினா். அவா்களை காளையாா்கோவில் போலீஸாா் தேடிவந்த நிலையில் காளையாா்கோவில் அருகே மறவமங்கலம் பெரியகண்மாய் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளா் அன்னராஜ், எஸ்ஐ ஹரிகிருஷ்ணன் ஆகியோ் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று தேடினா். அப்போது, போலீஸாரை கண்டதும் அவா்கள் தப்பி ஓட முயன்றனா். அப்போது, ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கீழே விழுந்தாா். மற்றொருவா் லேசான காயம் ஏற்பட்டது. இதை தொடா்ந்து அவா்களிடம் நடத்திய விசாரணையில் கால் முறிவால் பாதிக்கப்பட்டவா் திருப்புவனம் புதுத் தெருவை சோ்ந்த நிதிஷ்குமாா்(23), மற்றொருவா் திருப்புவனம் பெருமாள்கோவில் தெருவை சோ்ந்த கண்ணன் (21) என்பது தெரியவந்தது. நிதிஷ்குமாா் மீது 5 கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா் தேடப்படும் குற்றவாளியாக உள்ளாா். இருவரையும் கைது செய்த போலீஸாா், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.