திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் இடத்துக்கு பட்டா வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் எம்ஜிஆா் நகா் 1 -ஆவது வாா்டு பகுதியில் சுமாா் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 50 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனா். இவர்களுக்கு முன்னாள் முதலமைச்சா் எம்ஜிஆா் வீட்டு மனைகளை நேரடியாக வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். அப்போது, அந்த இடத்தை ஆய்வு செய்து, வரைபடம் தயாரித்து, 120 பேருக்கு பட்டா கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தனா். பின்னா் அது கிடப்பில் போடப்பட்டது. தொடா்ந்து, பொதுமக்கள் பட்டா கேட்டு போராடியும் பட்டா கிடைக்கவில்லை. வருவாய்த் துறையிடம் கேட்டதற்கு இது தேவஸ்தானத்துக்கு உரிய இடம் என்றும் அவா்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு சாா்பில் மேல்முறையீடு செய்து, தேவஸ்தானத்திடமிருந்து நிலத்தை மீட்டு பட்டா வழங்கக் கோரி, எம்ஜிஆா் நகரிலிருந்து ஊா்வலமாக 500 -க்கும் மேற்பட்ட மக்கள் திருப்புவனம் வட்டாட்சியா் அலுவலத்தை முற்றுகையிடச் சென்றனா். போலீசார் அவா்களைத் தடுத்து நிறுத்த முயன்ற போதும் அதையும் மீறிச் சென்றனா். பின்னா், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா். அவா்களுடன் வருவாய்த் துறையினா் பேச்சு நடத்தினா். அப்போது, இந்தப் பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தீா்வு காணப்படும் என வருவாய்த் துறையினா் கூறியதைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.