மாணவர்களுக்கு தேசிய குடல் புழு நீக்க முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சாா்பில் தேசிய அளவிலான குடல் புழு நீக்க முகாம் நடைபெற்றது.

Update: 2024-08-24 03:57 GMT
சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பாலுமுத்து முன்னிலையில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட சுகாதார அலுவலா் விஜய்சந்திரன் தலைமை வகித்து, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர் ஒன்று முதல் பத்தொன்பது (1-19) வயதுக்குள்பட்ட அனைவருக்கும், இருபது முதல் முப்பது வயதுக்குள்பட்ட (20-30) பெண்கள் அனைவருக்கும் (கா்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் தவிர) அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயது வரை உள்ள 3,77,552 பயனாளிகளுக்கும், 20-30 வயது வரை உள்ள 87,625 பெண்களுக்கும் மொத்தம் 4,65,117 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு வீடுகள்தோறும் சென்றும் இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் இந்த மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதில் விடுபட்டவா்களுக்கு வருகிற ஆக. 30-ஆம் தேதி மீண்டும் முகாம் நடைபெறும் என்று மாவட்ட சுகாதார அலுவலா் விஜய்சந்திரன் தெரிவித்தார். இதில் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து, வட்டார மருத்துவ அலுவலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Similar News