விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெருவிழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெருவிழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நகரத்தார் கோயிலான இங்கு விநாயகர் சதுர்த்தி பெருவிழா பத்து நாட்கள்நடைபெறும். விநாயகர்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடத்தப்படுவது சிறப்பு. இத்திருவிழாவை முன்னிட்டு தற்போது வெள்ளிக்கேடகம், தேர்களின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. கோயிலில்மின் விளக்கு அலங்காரப் பணி நடைபெறுகிறது. கோயிலில் ஆக.28ல் பூர்வாங்க பூஜைகள் நடக்கின்றன. ஆக. 29 காலையில் உற்ஸவர் கொடிமரம் எழுந்தருளி சிறப்பு பூஜை நடந்து கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.இரவில் மூஷிக வாகனத்தில் விநாயகர் திருவீதி வலம் வருவார். மறுநாள் முதல் எட்டாம் திருநாள் வரை காலை 9:30 மணிக்கு வெள்ளிக்கேடகத்தில் விநாயகர் புறப்பாடு நடைபெறும். தினசரி இரவில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், யானை, மயில், குதிரை வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். ஆறாம் திருநாளான செப்.3 மாலை கஜமுகசூரசம்ஹாரம் நடைபெறும். செப்.6 மாலையில் தேரோட்டமும், மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தலும் நடைபெறும். செப்.7 விநாயகர் சதுர்த்தியன்று காலையில் கோயில் குளத்தில் தீர்த்தவாரி, மதியம் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையல், இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவுடன் விழா நிறைவடையும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி மெய்யப்ப செட்டியார், பூலாங்குறிச்சி முத்துராமன் செட்டியார் செய்கின்றனர்.