விருத்தாசலத்தில் கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை படுகாயம்
குடிபோதையில் ஓட்டிய டிரைவரால் கடைக்குள் புகுந்த கார்
விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து கடலூர் சாலையில் ஒரு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பெரியார் நகரில் இருந்து தனியார் பள்ளி ஆசிரியையான இருப்பு குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த எட்வின் சேவியர் மனைவி ஜீவா (36) என்பவர் பள்ளிக்கூடத்திற்கு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் தனியார் பள்ளி ஆசிரியை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆசிரியை தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அப்போது காரானது அருகில் இருந்த கடைக்குள் புகுந்தது. அப்போது அப்பகுதியில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. தகவல் கிடைத்து விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் படுகாயம் அடைந்த தனியார் பள்ளி ஆசிரியை ஜூவாவை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த டிரைவர் காருக்குள் மது போதையில் இருந்தார். போலீசார் அவரை மீட்டு விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியபோது காரை ஓட்டியவர் விருத்தாசலம் செல்வராஜ் நகரைச் சேர்ந்த சிவக்குமார் (53) என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.