விருத்தாசலம் அருகே தொரவளூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
விருத்தாசலம் அடுத்த தொரவளூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. தொரவளூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா அருளரசன் தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் சையத் மெஹ்மூத், திமுக ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி, ஒன்றிய குழு தலைவர் மலர் முருகன், ஒன்றிய குழு துணை தலைவர் பூங்கோதை, சமூக நல தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்ராஹிம், மோகனாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவசெல்வி தென்றல் வரவேற்றார். விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று தீர்வு காணும் பணியில் ஈடுபட்டனர். இதில் தொரவளூர், கொடுக்கூர், பெரம்பலூர், பரவலூர், விளங்காட்டூர், எடையூர், முகுந்த நல்லூர், உள்ளிட்ட 7 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.